சிகரெட் பிடிக்க அழைத்து சென்று வாலிபரை கொன்ற மூவர் கைது

பெரவள்ளூர்,பெரம்பூர் அருகே அகரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு, 26. இவருக்கும், நண்பரான பெங்கால் என்கிற அந்தோணி பால்ராஜ் என்பவருக்கும், நேற்று முன்தினம் மாலை எஸ்.ஆர்.பி.கோவில் தெருவில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை 6:30 மணியளவில், சந்துரு, நண்பர் சந்தோஷ் உடன் வீட்டருகே பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த அந்தோணி பால்ராஜ், 'சிகரெட் பிடிக்கலாம் வா' எனக்கூறி, சந்துருவை பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் பூங்கா அருகே அழைத்துச் சென்றார்.

மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்துருவை, அந்தோணி பால்ராஜ் உள்ளிட்ட நண்பர்கள் வெட்டி விட்டு தப்பினர். சந்துருவை அங்கிருந்தோர் மீட்டு, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிரிழந்தார்.

கொலையாளிகளான புளியந்தோப்பைச் சேர்ந்த அந்தோணி பால்ராஜ், 24, வினித், 25, மற்றும் விவேக், 24, ஆகியோரை பிடித்து, பெரவள்ளூர் போலீசார் விசாரித்தனர்.

இதில், தகாத வார்த்தையால் திட்டிய சந்துருவை பயமுறுத்தவே கத்தியால் வெட்டியதாகவும், கொலை செய்யும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தனர். மூவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவின்படி நேற்று சிறையில் அடைத்தனர்.

Advertisement