சம்பாதித்துக்கொண்டே பல நாடுகளை சுற்றி பார்க்கலாம்; மரைன் கேட்டரிங் துறை பேராசிரியர் சுரேஷ்குமார் பேச்சு 

புதுச்சேரி : தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், மரைன் கேட்டரிங் ேஹாட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகள் குறித்து, மதுரை சுப்புலட்சுமி அறிவியல் கல்லுாரி, மரைன் கேட்டரிங் மற்றும் ஓட்டல் மேலாண்மை துறைத் தலைவர் பேராசிரியர் சுரேஷ்குமார் பேசியதாவது:

மருத்துவம், இன்ஜினியரிங் படிப்பை, பெரும்பாலான மாணவர்கள் முதல் தேர்வாக எடுத்து படிக்கின்றனர். இவர்களுக்கு இணையாக மரைன் கேட்டரிங் படித்தாலும் சம்பாதிக்கலாம். இந்த துறையில் நிறைய வாய்ப்புகள் உள்ளன.

உணவு என்பது ஒரு கலை. எனவே உணவுடன் தொடர்புடைய மரைன் கேட்டரிங் முடித்தவர்கள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நல்ல சம்பளம் பெறுகின்றனர்.

கேட்டரிங்கில் பல படிப்புகள் உள்ள போதும் மரைன் கேட்டரிங் படிப்பு முற்றிலும் வித்தியாசமானது. இப்படிப்பில் சேர, பிளஸ்2 தேர்ச்சியுடன் 52 முதல் 62 சதவீதம் வரை மதிப்பெண் பெற்றாலே போதும். நீட், கியூட், ஜே.இ.இ., என நுழைவு தேர்வு எழுத வேண்டியதில்லை.

மரைன் கேட்டரிங்கில் கண் பரிசோதனை செய்யப்படும். நிறக்குருடு உள்ளவர்கள் இப்படிப்பை எடுக்க முடியாது. கண் பவர் குறைந்தாலும், அதிகமானாலும் இப்படிப்பில் சேரலாம்.

இந்த படிப்பில் 90 சதவீதம் பிராக்டிக்கல் இருக்கும். உணவு தயாரிப்பு, பரிமாறுதல், ஹவுஸ்கீப்பிங், வரவேற்பு, கப்பலில் அடிப்படை குறித்து கற்று தருகின்றனர்.

கேட்டரிங்கில் நிறைய படிப்புகள் உள்ளது. ஆனால், மரைன் கேட்டரிங் அனைத்து கல்லுாரிகளில் இருக்காது. இந்தியாவில் மதுரை சுப்புலட்சுமி அறிவியல் கல்லுாரியில் நடத்தப்படுகிறது.

மரைன் டிகிரி முடித்தவுடன் கப்பலில் பணியாற்றலாம். ஆனால் பாஸ்போர்ட், எஸ்.டி.சி.டபுள்யூ, சி.டி.சி., சான்றிதழ் இருந்தால் மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கும். அந்த சான்றிதழ்களை அளிக்கும் நிறுவனங்களில் மட்டுமே இந்த படிப்புகளில் சேர முடியும். மரைன் கேட்டரிங் முடித்த மாணவர்கள் உடனடியாக 85 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கின்றனர். மரைன் கேட்டரிங் முடித்தவர்களுக்கு கார்கோ,குரூஸ்,பயணிகள் கப்பல் உள்ளிட்ட கப்பல் நிறுவனங்கள் சிறப்பு சலுகைகள் வழங்குகின்றன.

கப்பலில் இலவசமாக தங்கிக்கொள்ள அறை ஒதுக்குகின்றன. வரி இல்லை. இலவச விமான டிக்கெட் எடுத்து தருகின்றனர். பணிபுரியும் கப்பல்கள் எங்கு செல்கிறதோ, அந்த நாடுகளை சுற்றி பார்க்கலாம். கப்பல்களில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பணிபுரிகின்றனர்.

இவர்களுடன் நல்ல தகவல் தொடர்பு திறன், மொழியறிவு கிடைக்கும். சில ஆண்டுகள் வரை கூட கப்பலில் பணியாற்றிவிட்டு, அதில் கிடைக்கும் தொகை கொண்டு இங்கு சுய தொழில் ஆரம்பிக்கலாம். கப்பல் மட்டுமின்றி, ஸ்டார் ஓட்டல், ெஹல்த் டிபார்ட்மெண்ட்கள், ராணுவம், விமானம், விருந்தோம்பல் துறைகளிலும் பணியில் சேர்ந்து சம்பாதிக்கலாம். கைநிறைய சம்பளம், சொகுசான வாழ்க்கைக்கு மரைன் கேட்டரிங் உத்தரவாதம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement