செவிமடுக்காத அதிகாரிகள் உருவானது கொசுப்பண்ணை

பல்லடம் நகராட்சி, 4வது வார்டுக்கு உட்பட்ட எஸ்.ஏ.பி., நகர் குடியிருப்பு பகுதியில், கழிவுநீர் கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான முதல் கட்ட பணிகள் துவங்கிய போது, சரியான வாட்டம் இல்லாததால், கழிவுநீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகும் என, இங்குள்ள குடியிருப்பினர் குற்றம் சாட்டினர். ஆனால், பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, திட்டமிட்டபடி கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்டது.

இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், 'நகராட்சி பொறியாளர், தனக்கு, 35 ஆண்டு அனுபவம் இருப்பதாகவும், நிச்சயம், இதில் கழிவுநீர் செல்லும் என்றும் உறுதி கூறினார். ஆட்சேபனையை மீறி திட்டமிட்டபடி கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. ஏற்கனவே இங்குள்ள கால்வாயில், கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் உள்ள நிலையில், தற்போது, கட்டப்பட்ட கால்வாயால், மழைக்காலங்களில் பெரிதும் பாதிப்பு ஏற்படும்' என்றனர்.

நகராட்சி கமிஷனர் மனோகரனிடம் கேட்டதற்கு, 'இப்பிரச்னை தொடர்பாக நேரில் ஆய்வு மேற்கொண்டு உரிய தீர்வு காணப்படும்' என்றார்.

Advertisement