சரியும் கம்பம், டிரான்ஸ்பார்மர்; அச்சத்தில் மின் பணியாளர்கள்

மின் இணைப்பு சரிசெய்ய, திருப்பூர் காமராஜ் ரோடு, மரக்கடை சந்து பகுதியில் உள்ள மின் கம்பம் மீது மின் ஊழியர் ஏறியபோது, பலவீனமாக இருந்த மின் கம்பம் முறிந்து விழுந்தது. அங்குள்ள ஒரு கட்டட சுவர் மீது சரிந்து நின்றது. இதில் அந்த மின் ஊழியர் காயமடைந்தார்.

நேற்று முன்தினம், பாண்டியன் நகர் மின் அலுவலகத்துக்கு உட்பட்ட ஒரு பகுதியில் மின் டிரான்ஸ்பார்மர் முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. பூலுவபட்டி - வாவிபாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு மின் சப்ளை செய்யும் வகையில் மின் டிரான்ஸ்பார்மர், உரிய பாதுகாப்பு இன்றி, 5 அடி உயர ஒரு பில்லர் கட்டி அதன் மீது பொருத்தப்பட்டு இயங்கி வந்தது. நுாறு கே.வி.ஏ., திறன் கொண்ட இந்த டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டது. அதை சரி செய்ய அதன் மீது மின் ஊழியர் ஏறிய போது, இந்த டிரான்ஸ்பார்மர், பொருத்தியிருந்த பில்லரிலிருந்து கழன்று கீழே விழுந்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் மின் ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement