பைக்கில் மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் கண்ணாடியை உடைத்த இளைஞர்கள் திருவெண்ணெய்நல்லுார் அருகே பரபரப்பு

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லூர் அருகே பைக்கில் சென்றவர்கள் மீது மோதிய காரை, இளைஞர்கள் விரட்டி சென்று கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவி, 38; திண்டுக்கல்லில் தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். விடுமுறைக்காக, ஊரான சென்னைக்கு சென்றுவிட்டு மீண்டும் குடும்பத்துடன் திண்டுக்கல் திரும்பினார்.

திருவெண்ணெய்நல்லுார் அருகே நேற்று மாலை அரசூர் கூட்ரோடு பகுதியில் காரில் சென்றபோது, அவ்வழியாக பைக்கில் சென்ற 3 இளைஞர்கள் மீது கார் மோதிவிட்டு, அங்கிருந்து வேகமாக சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், அந்த காரை வேகமாக துரத்தி சென்றனர். கார் நிற்காமல் 5 கி. மீ., தூரம் சென்றதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் காரின் பின்பக்க கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்துள்ளனர்.

காரை ஓட்டிச்சென்று சஞ்சீவி திருநாவலூர் அருகே உள்ள கெடிலம் பகுதியில் வாகன சோதனை ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.

சம்பவம் திருவெண்ணெய்நல்லுார் எல்லைக்குட்பட்டது என, உடனடியாக திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சஞ்சீவியை அங்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சஞ்சீவி ஆன்லைனில் அளித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து இளைஞர்களை தேடி வருகின்றனர்.

மேலும் இளைஞர்கள் காரை துரத்தி சென்று கண்ணாடி உடைத்த சம்பவத்தில் சஞ்சீவி பதிவு செய்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement