பசுமையை பராமரிப்பதில் பங்களிக்கும் சேவா பாரதி --குடியிருப்பு நடுவே மரங்களால் வெயிலுக்கு இதம்

உயிர் வாழ்வதற்கு ஆக்சிஜன் உலகில் எவ்வளவு முக்கியம் என்பதை நவீன அறிவியல் உணர்த்தி வருகிறது.

இருப்பினும் மனிதனின் பேராசை, இயற்கையை மதியாத தன்மை போன்றவற்றால் நமக்கு துாய்மையான ஆக்சிஜனை தருவதுடன் நம்மால் கழிவாக வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்சைடை கிரகித்து பாதுகாக்கும் மரங்களை பல்வேறு தேவைகளுக்காக அழித்து வருகிறோம். இது தவிர தொழிற்சாலைகள், வாகனங்கள், குப்பைகள் எரிப்பதால் வெளியேற்றப்படும் நச்சு கழிவுகள் காற்று மாசுகளை கட்டுப்படுத்தி வருகிறது. மண் அரிப்பை தடுத்து பறவைகள் விலங்குகளுக்கு உணவு, இருப்பிடமாக இருந்து இயற்கை சமநிலையை பாதுகாக்கிறது.

அவசர உலகில் மனிதன் நிம்மதியை பெற இயற்கையை தேடி அலைகிறான். அத்துடன் ஆரோக்கியத்திற்கும் நோயற்ற வாழ்விற்கும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது முக்கிய கடமை. இதற்கு அடிப்படையாக உள்ள மரங்கள் மனித சமுதாயத்திற்கு பல்வேறு பலன்களை அளிக்கின்றன. அந்த வகையில் ராஜபாளையத்தை மாசில்லா நகராகவும் பசுமையாகவும் மாற்றுவதற்கு சேவா பாரதி சார்பில் நுாற்றுக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.

பள்ளி, கல்லுாரிகளுடன் இணைந்து கண்மாய் கரைகளில் பனை விதைகளை தொடர் நடவு செய்வதும், நகரின் நடுவே உள்ள சார் பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ள பகுதி முழுவதும் மரக்கன்றுகள் நட்டு சோலையாக மாற்றியும், கவிமணி தேசிய விநாயகம் தெரு குடியிருப்பு பகுதியில் உள்ள ஐந்து தெருக்களிலும் மரங்களை வளர்த்து பாதுகாத்து பசுமையான பகுதியாக வைத்திருக்கின்றனர்.

இது தவிர மாணவர்களிடையே விழிப்புணர்வு, தேவைப்படுவோரின் திருமண நிகழ்ச்சிகளுக்கு மரக்கன்றுகளை இலவசமாக வழங்குவது, நீர் நிலைகளை துாய்மையாக பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இவர்களின் தொடர் சேவையால் பேணி காத்து வளர்த்த மரங்கள் தற்போது கோடை காலங்களில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நிழல் தருகிறது.

கோடை தாக்கத்தை குறைக்கும்



ஆனந்த், உறுப்பினர் சேவாபாரதி: பசுமையை அனைத்து பகுதிகளிலும் பேணி காக்கும் விதமாக வாய்ப்புள்ள இடங்களில் மரக்கன்றுகளை நட்டு ஓரளவு வளரும் வரை அப்பகுதி குடியிருப்போரை பங்களிக்க செய்கிறோம். இதனால் மரங்களும் பசுமையாக வளர்ந்து மக்களுக்கும் பல்வேறு ஜீவ ராசிகளுக்கும் இளைப்பாற உதவுகிறது. வேங்கை, புங்கை, மருது போன்ற மரங்கள் கோடையிலும் அதன் தாக்கத்தை குறைத்து வருவதை காணலாம்.

பனை விதைகளை பராமரிக்கிறோம்



நந்தகுமார், நிர்வாகி, சேவா பாரதி: நீர்நிலைகளை காப்பதன் பொருட்டு கண்மாய் கரைகளை பலப்படுத்தும் விதமாக பனை விதைகளை நட்டு பராமரிக்கிறோம். ஆர்வமுள்ளவர்களுக்கு பனை விதைகள், கன்றுகளை பெற்றுத் தருவதில் பாலமாக செயல்படுவதுடன் இளைஞர்களை இச்சேவையில் ஊக்கப்படுத்தி பங்கெடுக்க செய்கிறோம். இளைய தலைமுறையினரின் ஆர்வம் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக உள்ளது.

Advertisement