நிழல் பந்தல் அமைத்து ஏலச்செடிகள் பாதுகாப்பு

மூணாறு : இடுக்கி மாவட்டத்தில் வெப்பம் அதிகரித்துள்ளதால் நிழல் அமைத்து ஏலச் செடிகளை விவசாயிகள் பாதுகாக்கின்றனர்.

இடுக்கி மாவட்டத்தில் தேவிகுளம், உடும்பன்சோலை, இடுக்கி ஆகிய தாலுகாக்களில் பணப் பயிரான ஏலம் பெரும் அளவில் சாகுபடியாகிறது.

ஏலத்தோட்டங்கள் மரங்கள் சூழ்ந்து காணப்படும் என்பதால், வெயில், மழை, பனி ஆகியவற்றில் இருந்து ஏலச் செடிகளை பாதுகாக்க மரங்கள் பெரிதும் உதவுகின்றன.

மரங்கள் இன்றி திறந்த வெளியில் உள்ள ஏலச் செடிகள் கால நிலை மாற்றம், இயற்கை சீற்றம் ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்படும்.

இந்நிலையில் வெப்பத்தில் இருந்து ஏலச் செடிகளை பாதுகாக்க விவசாயிகள் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக புதிய யுக்தியை கையாண்டு வருகின்றனர்.

அதன்படி திறந்த வெளியில் உள்ள ஏலச் செடிகளுக்கு மேல் மெல்லிய வலையால் பந்தலிட்டு நிழல் ஏற்படுத்தி பாதுகாக்கின்றனர்.

தற்போது மாவட்டத்தில் வெப்பம் அதிகரித்துள்ளதால் பல பகுதிகளில் பச்சை நிற வலை பந்தல் அமைத்து ஏலச் செடிகளை பாதுகாக்கின்றனர்.

ஒரு ஏக்கருக்கு நிழல் பந்தல் அமைக்க ரூ.70 ஆயிரம் வரை செலவாகிறது என விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement