கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

பெரியகுளம்: கோடை வெயில் தாக்கத்தால் கும்பக்கரை அருவியில் குறைந்தளவு தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ., துாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலை அடிவாரம், கும்பக்கரை அருவி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்யும் மழையால் அருவிக்கு தண்ணீர் வருகிறது. பல்வேறு பகுதியில் இருந்து கும்பக்கரை அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வர். கோடை வெயில் தாக்கத்தால் அருவிக்கு இம்மாதம் துவக்கத்தில் இருந்து தண்ணீர் வரத்து குறைய துவங்கியது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை, திருமணம் முகூர்த்தம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் காலை 8:00 மணி முதல் வரத் துவங்கினர். வெயிலின் தாக்கத்தால் கும்பக்கரை அருவியில் 'ஜில்லென' குறைந்தளவு தண்ணீரில், சுற்றுலாப் பயணிகள் காத்திருந்து, ஒவ்வொரு குடும்பமாக பொறுமையுடன் குளித்து மகிழ்ந்தனர். அருவி மேற்பகுதியில் நீரோடை பகுதியிலும் குளித்தனர்.