புதுச்சேரி நபரிடம் ரூ.2.78 லட்சம் மோசடி சைபர் கிரைம் கும்பல் கைவரிசை

புதுச்சேரி : போலி ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்த புதுச்சேரி நபர், மோசடி கும்பலிடம் ரூ. 2.78 லட்சம் இழந்துள்ளார்.

புதுச்சேரி, கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் புருேஷாத்தமன். இவரை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால், அதிக லாபத்துடன் பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய புருேஷாத்தமன், பல்வேறு தவணைகளாக 2 லட்சத்து 78 ஆயிரத்து 346 ரூபாய் மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து , தனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை செய்து வந்துள்ளார்.

அதன் மூலம் வந்த லாபப்பணத்தை புருேஷாத்தமன் தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயன்றபோது, முடியவில்லை. அதன்பிறகே, சைபர் மோசடி கும்பலிடம் பணத்தை ஏமாந்தது தெரியவந்தது.

இதேபோல், காட்டுக்குப்பத்தை சேர்ந்த மணிஷ்குமார் 30 ஆயிரம், புதுச்சேரி பெத்தி கானல் வீதியை சேர்ந்த நரேஷ் 4 ஆயிரத்து 800, ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த சையது ஓமர் 6 ஆயிரத்து 300, லாஸ்பேட்டையை சேர்ந்த சதீஷ்குமார் ஆயிரத்து 900, அரியாங்குப்பத்தை சேர்ந்த வெங்கடேசன் 14 ஆயிரத்து 800, புதுச்சேரி ஜான்சி நகரை சேர்ந்த சரவணன் 11 ஆயிரத்து 300, நெல்லித்தோப்பை சேர்ந்த மேரி ஜெஸ்பீன் 18 ஆயிரம் என மொத்தம் 8 பேர் சைபர் மோசடி கும்பலிடம் 3 லட்சத்து 65 ஆயிரத்து 400 ரூபாய் இழந்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரத்து வருகின்றனர்.

Advertisement