ஐரோப்பிய நாடுகளை விஞ்சிய இந்தியாவின் மெட்ரோ கட்டமைப்பு ; ஜெர்மனி நாட்டவர் வெளியிட்ட வீடியோ வைரல்

புதுடில்லி: தென்கொரியா, ஜப்பான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் வசதிகள், டில்லி மெட்ரோவில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் இருக்கும் இதுபோன்ற வசதிகளை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், கன்டன்ட் கிரியேட்டர்களும் உலகிற்கு வெளிப்படுத்தாதது ஆச்சரியமளிக்கிறது என்று ஜெர்மனியைச் சேர்ந்த சமூகவலைதள பிரபலம் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியைச் சேர்ந்த சமூகவலைதள பிரபலம் அலெக்ஸ் வெல்டர் என்பவர் தலைநகர் டில்லிக்கு வருகை தந்தார். அங்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்த அவர், அதன் அனுபவம் குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அதில், மேற்கு ஐரோப்பா நாடுகளை விட இந்தியாவில் மெட்ரோ கட்டமைப்பு சிறப்பாக இருந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது; இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு, இந்தியாவின் பொது போக்குவரத்தில் உடைந்த மற்றும் பழைய பேருந்துகள், இரைச்சலுடன் கூடிய ஆட்டோக்கள் மற்றும் ரிக்ஷாக்கள் தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால், இந்தியாவின் ஆக்ரா மற்றும் டில்லி உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பான மெட்ரோ கட்டமைப்புகள் இருப்பது எனக்கு தெரியாமல் போய்விட்டது.
டில்லியில் பிளாட்பார்ம் திரை கதவுகள், செல்போன்களை சார்ஜ் செய்யும் வசதிகள், பெண்கள் மற்றும் வயதானவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இருக்கைகள் உள்ளன. தெற்கு டில்லியில் தங்கியிருந்த போது, பெரும்பாலான சமயங்களில் மெட்ரோவில் இருக்கைகள் கிடைத்தன.
தென்கொரியா, ஜப்பான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் வசதிகள், டில்லி மெட்ராவில் செயல்படுத்தப்பட்டுள்ளன. நேர்மையாக சொல்லப்போனால், இந்தியாவில் இத்தனை அம்சங்கள் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, எனக் கூறியுள்ளார். மேலும், இந்தியாவில் இருக்கும் இதுபோன்ற வசதிகளை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், கன்டன்ட் கிரியேட்டர்களும் உலகிற்கு வெளிப்படுத்தாதது ஆச்சரியமளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவரது இந்த வீடியோவுக்கு ஏராளமானோர் லைக்குகளையும், கமென்ட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.









