தப்பியது டைடல் பார்க் சந்திப்பு திணறுகிறது மத்திய கைலாஷ்

சென்னை,
ஓ.எம்.ஆர்., டைடல் பார்க் சந்திப்பில், 'யு' வடிவ மேம்பாலம், கடந்த மாதம் திறக்கப்பட்டது. இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைந்தது.

மாறாக, மத்திய கைலாஷ் சந்திப்பில் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. துரைப்பாக்கம், திருவான்மியூரில் இருந்து டைடல் பார்க் வழியாக, மத்திய கைலாஷ் நோக்கி செல்லும் வாகனங்கள், சிக்னலில் நின்று சென்றன.

மேம்பாலம் திறந்த பின், திருவான்மியூரில் இருந்து மத்திய கைலாஷ் நோக்கி செல்லும் வாகனங்கள், சிக்னலில் நிற்காமல் மேம்பாலம் வழியாக செல்கின்றன. அதுபோல், துரைப்பாக்கத்தில் இருந்து செல்லும் வாகனங்களும், சிக்னலில் காத்திருப்பதில்லை.

அதேபோல், அடையாறில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள், மத்திய கைலாஷ் சந்திப்பில் இருந்து, ஓ.எம்.ஆரில் திருப்பி விடப்பட்டு, அங்கு யு - டர்ன் செய்து செல்கின்றன.

இதனால், டைடல் பார்க் மற்றும் அடையாறில் இருந்து வரும் வாகனங்களும், சிக்னலில் நிற்காமல் செல்கின்றன.

இதோடு, ஓ.எம்.ஆரில் இருந்து மத்திய கைலாஷ் வழியாக, அடையாறு நோக்கி செல்லும் வாகனங்களும், கேன்சர் மருத்துவமனை மேம்பாலத்தின் கீழ் பகுதியில், யு - டர்ன் செய்கிறது.

இதனால், மத்திய கைலாஷ் முதல் கேன்சர் மருத்துவமனை மேம்பாலத்தின் கீழ் பகுதி வரை, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஒரு நிமிடத்தில் செல்ல வேண்டிய வாகனங்களுக்கு, ஐந்து நிமிடம் வரை ஆகிறது.

அடையாறு நோக்கி செல்லும் வாகனங்களை, மத்திய கைலாஷ் சந்திப்பில், வலது பக்கம் திரும்பி செல்லும் வகையில் வழி அமைத்தால், மேம்பாலத்தின் கீழ் பகுதி யு - டர்னில் திரும்புவதால் ஏற்படும் நெரிசல் தடுக்கப்படும். நேராக செல்லும் வாகனங்களும் விரைவாக செல்ல முடியும்.

இதற்கு ஏற்ப, போக்குவரத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement