பட்டா நிலத்தை ஆக்கிரமித்து 'பார்' நடத்தும்தி.மு.க., நிர்வாகி மீது கலெக்டரிடம் புகார் மனு
பட்டா நிலத்தை ஆக்கிரமித்து 'பார்' நடத்தும்தி.மு.க., நிர்வாகி மீது கலெக்டரிடம் புகார் மனு
தர்மபுரி:பென்னாகரம் அருகே, பட்டா நிலத்தை ஆக்கிரமித்து, டாஸ்மாக் 'பார்' நடத்தும், தி.மு.க., நிர்வாகிகள் மீது நடவடிக்கை கோரி, நெருப்பூரை சேர்ந்த போலீஸ்காரர் முத்துசாமி என்பவருடைய மனைவி உமாமகேஸ்வரி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார்.
அதில், அவர் தெரிவித்துள்ளதாவது: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த, நெருப்பூர் காட்டூரில் எங்களது பூர்வீக நிலம் உள்ளது. குழந்தைகளின் படிப்பிற்காக, தர்மபுரிக்கு குடி பெயர்ந்தோம். என் கணவருக்கு, 2018 பாகப்பத்திரம் பாத்தியபடி, 4 ஏக்கர் விவசாய நிலம் நாகமரை பஞ்.,ல் உள்ளது. அதை, கணவரின் சகோதரர் சாமிக்கண்ணு பராமரித்து வந்தார். அவர், அஜ்ஜம்பட்டியை சேர்ந்த, தி.மு.க., ஒன்றிய துணை செயலாளர் சம்பத் மற்றும் தி.மு.க., மீனவரணி துணைத்
தலைவர் முருகன் ஆகியோருக்கு எங்கள் நிலத்தை, எங்கள் அனுமதியின்றி, டாஸ்மாக் பாருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.
மது வாங்கி குடிப்போர் பாட்டில்களை விவசாய நிலத்தில் உடைத்து போட்டு செல்வதால், விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. பாரை காலி செய்ய தெரிவித்தோம். இதற்கு, சாமிக்கண்ணு மற்றும், தி.மு.க., நிர்வாகிகள் சம்பத், முருகன் ஆகியோர் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.
இது குறித்து, போலீஸ் ஸ்டேஷன், தாசில்தார் உள்ளிட்டோரிடம் பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எங்கள் பட்டா நிலத்தை அபகரிக்க நினைக்கும், தி.மு.க.. நிர்வாகிகள் உட்பட மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.