'கந்தசாமிபுரம்' பெயரை மாற்ற எதிர்ப்பு : கமிஷ்னரிடம் மனு

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் உள்ள, கந்தசாமிபுரத்தின் பெயரை மாற்ற அப்பகுதி மக்கள் மற்றும் அ.தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உளுந்துார்பேட்டை தொகுதியில் மூன்று முறை காங்., எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் கந்தசாமி. சுதந்திர போராட்ட தியாகி. இவர் நீண்ட காலமாக ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். இதனால் அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், பி.டி.ஓ., அலுவலகம் அருகே உள்ள பகுதிக்கு, 'கந்தசாமிபுரம்' என பல ஆண்டுகளுக்கு முன் பெயர் வைக்கப்பட்டு, தற்போதும் பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், அந்த பகுதியின் பெயரை மாற்றி, அங்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு வளைவு வைக்க, நகராட்சியில், ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதை அறிந்த அப்பகுதி மக்கள் 'கந்தசாமிபுரம்' எனும் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக, நகராட்சி கமிஷனர் இளவரசனிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். இந்த நிகழ்வில், அ.தி.மு.க., நகர செயலாளர் துரை தலைமையில் நகர துணை செயலாளர் கோபால், மாவட்ட வழக்கறிஞரணி துணைச் செயலாளர் செந்தில்குமார், பேரவை செயலாளர் வெற்றிவேல், வார்டு செயலாளர்கள் வெங்கடேசன், தனசேகர், சின்னா, காமேஷ், நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், ரங்கநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி கமிஷ்னர் தெரிவித்தார்.

Advertisement