தோவாளை மாணிக்க மாலை, கும்பகோணம் வெற்றிலைக்கு கிடைத்தது புவிசார் குறியீடு

தஞ்சாவூர்:கும்பகோணம் வெற்றிலை, குமரி தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளதாக, அறிவுசார் சொத்துரிமை சிறப்பு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தெரிவித்தார்.

தமிழகத்தில், 62 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டு, நாட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வெற்றிலை, குமரி மாவட்டம், தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளது.

இதுகுறித்து, தஞ்சாவூரில் நேற்று அறிவுசார் சொத்துரிமை சிறப்பு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி கூறியதாவது:

கடந்த 2022 ஜன., 13ம் தேதி, தமிழ்நாடு வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் வாயிலாக, கும்பகோணம் வெற்றிலை உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில், கும்பகோணம் வெற்றிலைக்கும், தமிழ்நாடு கைவினைப்பொருட்கள் மேம்பாட்டு கழகம் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் மூலம், தோவாளை மாணிக்க மாலை கைவினைக் கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது.

நவம்பரில் மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டு, சட்ட விதிப்படி நான்கு மாதங்கள் முடிவடைந்த நிலையில், புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளது. தமிழகத்தில் இதுவரை 62 பொருட்களுக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 பொருட்களுக்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில், இந்தியாவில் பூ மாலைக்கு புவிசார் குறியீடு இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement