ரசாயனம் கலப்பு வதந்தியால் தர்பூசணி விற்பனை சரிவு உணவு பாதுகாப்பு துறை ஆய்வு செய்ய கோரிக்கை

விழுப்புரம்:தமிழகத்தில் திடீர் வதந்தியால், தர்பூசணி விற்பனை பாதித்துள்ளது. உணவு பாதுகாப்புத் துறையினர் பழங்களை ஆய்வு செய்து, உண்மை தரத்தை நிருபிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கோடை வெயிலுக்கு, அதிகம் நீர்ச்சத்து மிக்க தர்பூசணி பழங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டம், வானுார், மரக்காணம், காணை, முகையூர், திண்டிவனம் தாலுகாக்களில் 6000 விவசாயிகள் மூலம் 8,500 ஏக்கர் அளவில் தர்பூசணி பயிரிடப்பட்டு, இந்தாண்டும் அறுவடை நடந்து, தினசரி லாரிகளில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், பொது மக்களை ஈர்க்கவும், சுவைக்காகவும் தர்பூசணி பழங்களில் ரசாயனம் கலந்து விற்கப்படுவதாக, சில தினங்களுக்கு முன் தகவல் பரவியது.
இதனையடுத்து, வேளாண்துறை குழுவினர் தோட்டங்களுக்கு நேரில் சென்று, தர்பூசணி பழங்களை சோதித்தும், அதனை சாப்பிட்டு பார்த்தும் தரமாக உள்ளது, ரசாயனம் கலப்பு வதந்தி என விளக்கினர்.
ஆனால், தர்பூசணி குறித்த வதந்தியால், திடீரென அதன் விற்பனை சரிந்து பாதித்துள்ளதாக விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விழுப்புரம் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலிவரதன், முருகேசன் ஆகியோர் கூறுகையில், 'விழுப்புரம் மாவட்டத்தில் 8,500 ஏக்கர் பரப்பில் தர்பூசணி விளைகிறது. கடந்தாண்டில் ஒரு டன் 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. இந்தாண்டு வதந்தி பரப்பியதால் வீழ்ச்சியடைந்து டன் 5,000 ரூபாயாக குறைந்துள்ளது.
பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களில் சதியால், இயற்கையாக விளையும் தர்பூசணி போன்ற பழங்களில் ரசாயனம் கலப்பதாக வதந்தி பரப்புகின்றனர். விளையும் இடத்தில் ஆய்வு செய்யாமல், அதிகாரிகளும் தவறான தகவலை அளித்துள்ளனர்.
தர்பூசணி, ஏக்கருக்கு 15 முதல் 20 டன் விளைகிறது, ஒவ்வொரு பழத்திற்கும் ரசானயத்துக்கு ஊசி போடவும் முடியாது. ரசாயனம் கலப்பு என்பது முற்றிலும் வதந்தி தான்.
இதனால், உணவு பாதுகாப்பு துறையினர், தர்பூசணி நிலங்களில் ஆய்வு செய்து, அதன் உண்மை தன்மையை மக்களிடம் விளக்கி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்' என்றனர்.
மாவட்ட வேளாண்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தர்பூசணி தோட்டங்களில் நேரில் பழங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தரமானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. ரசாயனம் கலப்பு என்பதும் வதந்தி தான். அதற்கு வாய்ப்பும் இல்லை. அரசுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது' என்றனர்.
விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தினர், தர்பூசணி விற்பனை பாதிப்பு குறித்து விளக்கி மனு அளிப்பதற்காக, நேற்று மதியம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு, தர்பூசணி பழங்களுடன் திரண்டு வந்தனர். அவர்கள், கலெக்டர் அலுவலக வாயில் பகுதியில் தர்பூசணி பழங்களை வெட்டி, அதனை சாப்பிட்டும், பொது மக்கள், அலுவலர்களுக்கும் வழங்கியும், தரமாக உள்ளதாக விளக்கினர்.அதனைத் தொடர்ந்து, தர்பூசணி குறித்த வதந்திக்கு, அரசு தரப்பில் ஆய்வு செய்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, அவர்கள் கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் மனு அளித்து கலைந்து சென்றனர்.
மேலும்
-
வாரியத்தில் 'கிக்' தொழிலாளர்களின் பதிவை அதிகரிக்க எதிர்பார்ப்பு: விழிப்புணர்வு ஏற்பட்டால் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்
-
காரியாபட்டியில் நிரந்தர பஸ் டெப்போ வருமா
-
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
-
பீகார் வாலிபர் தற்கொலை
-
ஸ்ரீவில்லிபுத்துாரில் மான் வேட்டை: 4 பேர் கைது
-
கல்வியின் தரத்தில் அர்ப்பணிப்பு: கமாண்டிங் அலுவலர் புகழாரம்