உண்டு உறைவிட பள்ளி மாணவர் சேர்க்கை வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மதுரை : உண்டு உறைவிட பள்ளிகளில் பட்டியலின சமூக மாணவர்கள் சேர்க்கை திட்டம் குறித்து அனைத்து மாநிலங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் அறிவிப்பு செய்ய தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
மதுரை வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:
உண்டு உறைவிட பள்ளிகளில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் 9வது வகுப்பு, பிளஸ் 1 ல் சேர்வதற்கான திட்டத்தை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்துறை செயல்படுத்துகிறது. உதவித் தொகையுடன் தரமான கல்வியை வழங்குவதே இதன் நோக்கம். இதற்கான நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இதற்குரிய அறிவிப்பு இணையதளத்தில் வெளியாகிறது. இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய விழிப்புணர்வு கிராமப்புற மாணவர்கள், பெற்றோர்களிடம் இல்லை. அறிவிப்பை அந்தந்த மாநில மொழிகளில் வெளியிடுவதில்லை.
திட்டம் குறித்து அனைத்து மாநிலங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் அறிவிப்பு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: பாதிக்கப்பட்ட மாணவர்கள் யாரும் வழக்கு தொடரலாம். இதுபோன்ற மனு ஏற்புடையதல்ல. தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.