'கணப்பொழுதும் நிம்மதியின்றி காலம் கழிக்கிறோம்' கணபதி நகர் குடியிருப்போர் குமுறல்

மதுரை: எந்நாளும் அடிப்படை வசதிகள் இன்றியும், ஒருபோதும் முறையான பாதை இல்லாமலும், தினம் தினம் சமூக விரோதிகள் ஆக்கிரமிப்பாலும் நகர வாழ்வு நரக வாழ்வாக மாறி, கணநேரமும் மகிழ்ச்சியின்றி காலம் கழிப்பதாக கணபதி நகர் மக்கள் புலம்புகின்றனர்.

மதுரை முத்துப்பட்டி கணபதி நகரில் மெயின் ரோடு, 1, 2 குறுக்குத் தெரு சுற்றுப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கணபதி நகர் குடியிருப்போர் நிர்வாகிகள் கோபால், நவநீத கிருஷ்ணன், சுந்தர், லட்சுமணன், ராகவன் கூறியதாவது:

சுற்றி சுற்றி செல்கிறோம்



இங்கிருந்து மெயின் ரோடு செல்வதற்கு முறையான பாதையே கிடையாது. அவனியாபுரம், முத்துப்பட்டி வழியாக சுற்றிச் செல்கிறோம்.

கோவலன் நகர் செல்ல 2 வழிகள் உள்ளன. முதல் பாதை மெயின் ரோட்டை கோவலன் நகரோடு இணைப்பது, இரண்டாவது மெயின் ரோட்டின் முடிவில் கோவலன் நகரை இணைக்கும் பாலம் அமைக்கலாம். மருத்துவமனை செல்ல கஷ்டமாக இருக்கிறது. மாற்று வழிகளில் ஏதாவது ஒன்றில் பாதை அமைக்க வேண்டும்.

சமூக விரோத அச்சுறுத்தல்



சமூக விரோதிகள் நிறைய காலி இடத்திலும், விவசாய நிலத்திலும் இரவில் மது அருந்துதல், போதை மருந்து பயன்படுத்துதல் என செயல்படுவதால் அந்த இடங்கள் அலங்கோலமாக கிடக்கிறது.

மது பாட்டிலை உடைத்துப் போட்டுச் செல்வதால் விவசாய கிணற்றை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. யாராலும் தட்டிக் கேட்க முடியவில்லை. இரவில் பெண்கள் அவசரத்திற்காக மருத்துவமனை செல்வதற்குக்கூட அச்சப்படுகின்றனர். புறநகர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும்.

சுற்றுப்புறங்களில் ஒரு ரோடு கூட சீராக இல்லை. பாதாளச்சாக்கடை திட்டம் கேட்டு மனு கொடுத்தும் தீர்வில்லை. அதற்காக மழைநீர் வடிகால் உள்ளிட்ட பல திட்டங்கள் நிலுவையில் உள்ளது. மேல்நிலைத் நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது. சோதனை மற்றும் தொட்டியை துாய்மைப்படுத்த தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அது குடியிருப்பு பகுதிகளில் தேங்கி சுகாதார சீர்கேடாகிறது. நீரை வாய்க்காலில் வெளியேற்ற வேண்டும்.

மினி பஸ் கிடைக்குமா



அவனியாபுரம், முத்துப்பட்டி, கோவலன்நகர் பகுதிகளுக்கு மினி பஸ் திட்டத்தில் போக்குவரத்து வசதி கிடைத்தால் பயன்பெறுவோம். ரோடு மோசமாக உள்ளதால் ஆட்டோகாரர்களும் வர மறுக்கின்றனர். டூவீலரை மட்டுமே நம்பி உள்ளோம். வயதானோர், பெண்கள், குழந்தைகள் சிரமப்படுகின்றனர். தெருநாய்கள் பிரச்னைக்கும் தீர்வு காண வேண்டும் என்றனர்.

Advertisement