அரசு பள்ளிகளில் 'மிஷன் இங்கிலிஷ்' திட்டம் ஆங்கில புலமை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

புதுச்சேரி: அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்திட பள்ளிக்கல்வித்துறை சார்பில் 'மிஷன் இங்கிலிஷ்' திட்டம் இந்த கல்வி ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.22 லட்சம் செலவில் அழகிய வண்ணத்தில் எளிய நடையில் புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்திற்கு என கல்வி வாரியம் இல்லாததால், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தமிழக பாடத் திட்டமும், ஏனாமில் ஆந்திர பாட திட்டமும், மாகியில் கேரள பாட திட்டம் பின்பற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் பொருட்டு புதுச்சேரி அரசு கடந்த 2014ம் ஆண்டு தொடக்கப்பள்ளியில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் துவங்கப்பட்டது.

5ம் வகுப்புவரை சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பின் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் மற்றும் நிர்வாக காரணங்களால் உயர் மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கு மாற்றம் செய்யப்படவில்லை.

இந்நிலையில் அரசு பள்ளிக்கல்வி முழுவதையும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மாற்ற முடிவு செய்தது. அதன்படி கடந்த 2023-24ம் கல்வி ஆண்டில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பிற்கும், 2024-25 கல்வி ஆண்டில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கு சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த கல்வியாண்டில் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பொதுத் தேர்வும் எழுதியுள்ளனர்.

தொடக்க கல்வியை சி.பி.எஸ்.இ.,யிலும், அடுத்த நடுநிலை மற்றும் உயர்நிலை மாநில பாடத்திட்டத்தில் படித்து வந்த நிலையில் திடீரென சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மாற்றப்பட்டதால் மாணவர்கள் பாடம் கற்பிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. குறிப்பாக ஆங்கிலப் புலமை இல்லாமல் மாணவர்கள் திணறி வருகின்றனர்.

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை பொறுத்தமட்டில், பாடத்தை புரிந்து படித்தால் மட்டுமே தேர்வில் எளிதாக எதிர்கொள்ள முடியும். அதனால், மாணவர்களுக்கு ஆங்கில புலமையை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் ' மிஷன் இங்கிலிஷ்' என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது.

அதில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கிலத்தை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் படத்துடன் கூடிய புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டு, ரூ.22 லட்சம் செலவில் பெங்களூருவில் அச்சிடப்பட்டு வருகிறது.

இந்த புத்தகங்கள் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

புத்தகம் வழங்குவதோடு மட்டுமன்றி, தினசரி ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு பாடவேளை இந்த 'மிஷன் இங்கிலிஷ்' புத்தகத்தை நடத்தவும் ஆசிரியர்கள் அறிவுருத்தப்பட்டுள்ளனர். மேலும், இதற்காக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Advertisement