ஒரு சில அரசு அலுவலக ஊழியர்களால்.. அலைக்கழிப்பு; வரச்சொல்லி வந்தாலும் இருப்பதில்லை

திருவாடானை : அரசு அலுவலக நேரத்தில் வரச்சொல்லி வந்தாலும் ஒரு சில ஊழியர் இருப்பதில்லை. மேலும் தாமதமாக வருவதால் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். திருவாடானை தாலுகா அலுவலகம் பின்புறம் நில அளவையர் அலுவலகம் உள்ளது. வருவாய், நில அளவைத் துறை ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். திருவாடானை தாலுகாவை சேர்ந்தவர்கள் நிலம், வீட்டுமனைப் பட்டா பெறுவது, பட்டா பெயர் மாற்றம், பல வகை சான்றுகள் பெறுவதற்காக இணையவழியில் விண்ணப்பித்து வருகின்றனர்.

அது தொடர்பான விசாரணை, ஆவண சரிபார்ப்பு ஆகிய நடைமுறைகளுக்காக விண்ணப்பதாரர்கள், தாலுகா அலுவலகம் செல்கின்றனர். அலுவலகத்தில் அலுவலர்களை சந்திக்க இயலாமல் அலைக்கழிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து தொண்டி மற்றும் நீர்க்குன்றத்தை சேர்ந்தவர்கள் கூறியதாவது:

விண்ணப்பதாரர்களை தாலுகா அலுவலகம் வருமாறு ஊழியர்கள் அழைக்கின்றனர். ஆனால் அவர்களோ தாமதமாக அலுவலகம் வருகின்றனர். பல மணி நேரம் அவரவர் இருக்கையில் இருப்பதும் இல்லை. இதனால் ஏராளமான கோப்புகள் தேங்கியுள்ளன.

அதிகாரிகள் ஆய்வு செய்தால் இதை அறிந்து கொள்ளலாம். பல மணி நேரம் காத்திருந்தும் எங்கள் பணி முடிக்கப்படாமல் ஏமாற்றத்துடன் திரும்புகிறோம். நில அளவை மட்டுமின்றி பல்வேறு அரசு ஊழியர்கள் பகல் 12:00 மணியாகியும் அலுவலகங்களுக்கு வராமல் உள்ளனர். உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

---

Advertisement