தெருக்களில் ரோடு, வாறுகால்கள் இல்லை
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை பாலையம்பட்டி இ.பி., காலனி தெருக்களில் ரோடு, வாறுகால் இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து, இ.பி., காலனி குடியிருப்போர் சங்க தலைவர் வெங்கடசாமி, செயலர் நவநீதகிருஷ்ணன், உபதலைவர் இருளாண்டி, துணை செயலர் சுந்தர்ராஜன், பொருளாளர் ரேணுகா தேவி, உறுப்பினர்கள் பஞ்சவர்ணம், சரவணன், ராஜகுமாரி, சந்தனமாரி ஆகியோர் கூறியதாவது : அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பாலையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது இ.பி., காலனி. எங்கள் பகுதி உருவாகி 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் தேவையான வளர்ச்சி பணிகள் வசதிகள் செய்யப்படவில்லை.
இங்குள்ள தெருக்களில் ரோடு இல்லாமல் குண்டும், குழியுமாக உள்ளது. வாகனங்கள் செல்ல முடியவில்லை. மெயின் ரோட்டிலிருந்து எங்கள் காலனிக்கு வரும் ரோடு கற்கள் பெயர்ந்து காலில் குத்துகிறது. தெருக்களில் முட்புதர்கள் முளைத்து நடக்க முடியவில்லை. இரவு நேரங்களில் பாம்புகள் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பல தெருக்களில் வாறுகால்கள் சேதமடைந்தும் கழிவுநீர் வெளியேற முடியாமல் இருப்பதால் சுகாதாரத் கேடு ஏற்படுகிறது.
இங்குள்ள 2 வது தெருவில் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலைத் தொட்டியின் தூண்கள் சேதம் அடைந்து தொட்டி விழுந்து விடும் நிலையில் உள்ளது. தொட்டியின் மேல் புறமும் விரிசல் கண்டுள்ளது. ஊராட்சி நிர்வாகம் தொட்டியை இடித்துவிட்டு புதியதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்திலும் தாமிரபரணி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இ.பி., காலனியில் மட்டும் தாமிரபரணி குடிநீர் வருவது இல்லை. மேல்நிலைத் தொட்டியில் இருந்து வரும் குடிநீரும் உப்பு தன்மையுடன் இருப்பதால் குடிக்க முடிவதில்லை. குடிநீரை வெளியில் இருந்து தான் காசு கொடுத்து வாங்கி குடிக்கின்றோம்.
ஒரு ஆண்டிற்கு முன்பு ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டது. ஆனால் தண்ணீர் தான் வருவது இல்லை. குழாய்கள் அனைத்தும் காட்சி பொருளாக உள்ளது. தெருக்களி நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கழிவுநீர் தேங்கி இருப்பதால் கொசு தொல்லையும் தாங்க முடிவதில்லை. அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி நாங்கள் பலமுறை ஊராட்சியில் கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
ஊராட்சிக்கு தேவையான அனைத்து வரிகளையும் நாங்கள் தவறாமல் கட்டுகிறோம். ஆனால் வசதிகளை செய்து தருவதில் மட்டும் ஊராட்சி பாரமாக உள்ளது. நகர் உருவாகி 40 ஆண்டுகள் ஆனபோதிலும் வசதிகள் இன்றி தவிக்கிறோம். மாவட்ட நிர்வாகம் தான் எங்கள் பகுதிக்கு தேவையான வளர்ச்சி பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர்.
மேலும்
-
வண்டிப்பாளையம் கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்
-
உயர்கல்வி வழிகாட்டுதல் 5ம் தேதி ஆலோசனை முகாம்
-
மலட்டாற்றில் தடுப்பு சுவர் : சபா ராஜேந்திரன் கோரிக்கை
-
உலக ஆட்டிசம் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
-
விருதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்; வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு
-
நெய்வேலியில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம்