தி.மு.க., சொன்னது வேறு; செய்வது வேறு

கோவை; மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து, வெளியிட்ட அரசாணையை தீயிட்டு கொளுத்தும் போராட்டம், கோவையில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க, கோவை மண்டலம் சார்பில் நடந்தது.
இதில், சாலைப்பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் செந்தில்நாதன் பேசியதாவது:
ஜெ., ஆட்சி காலத்தில், ஒரே நாள் இரவில், ஒரே உத்தரவில், 10 ஆயிரம் சாலை பணியாளர்களை பணி நீக்கம் செய்தார். 41 மாத பணி நீக்கத்தை முறைப்படுத்தக்கோரி, ஐகோர்ட்டில் முறையிட்டு, 2006ல் பணிக்குத் திரும்பினோம்.
சட்ட போராட்டம் நடத்தி, எட்டு வாரத்துக்குள் பணி நீக்க காலத்தை முறைப்படுத்த, உத்தரவு பெறப்பட்டது. ஆனால், நான்கு மாதங்கள் கடந்தும் கூட, அந்த உத்தரவை தமிழக அரசு செயல்படுத்தாமல் உள்ளது.
மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து, அரசாணை எண்: 140 வெளியிடப்பட்டுள்ளது. 60 கி.மீ.,க்கு ஒரு சுங்கச்சாவடி வீதம், 210 இடங்களில் மாநில நெடுஞ்சாலைகளில் அமைய உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில், 52 சுங்கச்சாவடிகள் உள்ளன.
காலாவதியான சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில், சுங்கச்சாவடியை அகற்றுவோம் என, தமிழக முதல்வர் வாக்குறுதி அளித்தார்.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள, சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்தி வரும் தமிழக அரசு, மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிஅமைப்பதற்கான வேலையை செய்து வருகிறது. மாநில நெடுஞ்சாலை ஆணையம் செயல்பாட்டுக்கு வந்தால், 5,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகும்.
தேர்தல் காலத்தில் சொல்வது ஒன்றாகவும், நடைமுறைப்படுத்துவது வேறு விதமாகவும் இருக்கிறது. எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்தபோது, தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்துவோம் என, வாக்குறுதி கொடுத்தார்.
சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டும் கூட, இதுநாள் வரை அமல்படுத்தாமல் இருப்பதை, வேதனையோடு பார்க்க வேண்டியிருக்கிறது. இவ்வாறு, அவர் பேசினார்.
அப்போது, அரசிதழ் மற்றும் அரசாணையை சங்கத்தினர் கிழித்து, தீயிட்டு கொளுத்தினர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிச்சென்று, அதை பறித்து அணைத்தனர்.
ஆங்காங்கே கிழிந்து கிடந்த அரசாணையை, போலீசாரே எடுத்தனர். தமிழக அரசை விமர்சித்து கோஷமிட்ட சங்கத்தினர், கைது செய்யப்பட்டனர்.
மேலும்
-
கறைபடியும் கல்வித்துறை; அரசுக்கு இல்லை அக்கறை!
-
வண்டிப்பாளையம் கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்
-
உயர்கல்வி வழிகாட்டுதல் 5ம் தேதி ஆலோசனை முகாம்
-
மலட்டாற்றில் தடுப்பு சுவர் : சபா ராஜேந்திரன் கோரிக்கை
-
உலக ஆட்டிசம் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
-
விருதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்; வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு