நிலநடுக்கத்தால் உருக்குலைந்த மியான்மர் பலி எண்ணிக்கை 2,700 ஆக உயர்ந்தது

பாங்காக்; சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மியான்மர் உருக்குலைந்துள்ள நிலையில், மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய 63 வயது மூதாட்டி ஒருவர் 72 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டார். பலி எண்ணிக்கையும் 2,700 ஆக அதிகரித்துள்ளது.

நம் அண்டை நாடான மியான்மரில், கடந்த மாதம் 29ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 2,00-0க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நிலநடுக்கம் ஏற்பட்டு நான்கு நாட்களை கடந்த நிலையில், மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டதால், மீட்புப் பணிகளை மேற்கொள்வது சவாலாக உள்ளது.

இந்நிலையில், மியான்மரின் நய்பிடாவ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணியின்போது கட்டட இடிபாடுகளில் சிக்கி, 91 மணி நேரத்திற்கு பின், 63 வயதான மூதாட்டி ஒருவரை மீட்புக்குழு உயிருடன் மீட்டது. இதற்கிடையே, இடிபாடுகளில் இருந்து ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, பலி எண்ணிக்கை 2,719 ஆக அதிகரித்துள்ளது.

பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மியான்மரின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம், தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், மருத்துவ உதவிகளும் மியான்மர் மக்களுக்கு உடனடி தேவையாக உள்ளது. போதிய குடிநீர் வசதியும் இல்லாததால் அங்குள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

Advertisement