தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்; பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்கும் முதல்வர் ஸ்டாலின்

74

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளார்.



இதுகுறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதம் குறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது;


தொகுதி மறுசீரமைப்பு நிர்ணயம் தொடர்பான கவலைகள் பற்றிய எங்களின் குறிப்பாணையை வழங்க பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்களுடன் சேர்ந்து உங்களை சந்திக்க கோரியுள்ளேன். சென்னையில் நடைபெற்ற கூட்டுக்குழுக் கூட்டத்தின் தீர்மானங்களை தொடர்ந்து கடிதம் எழுதுகிறேன்.


ஏற்கனவே குறிப்பிட்டது போல முக்கிய பிரச்னையில் எங்களின் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை தெரிவிக்க தங்களை அவசரமாக சந்திக்க நேரம் கோருகிறோம். உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம்.


இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். பிரதமருக்கு எழுதிய கடித்தையும் தமது சமூக வலைதள பதிவில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது;


தமிழகத்தில் இருந்து எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், இந்தக் கடிதம் உங்களை நலம் பெறச் செய்யும் என்று நம்புகிறேன்.


பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்களுடன் எங்கள் சமீபத்திய விவாதங்களிலிருந்து உருவான எல்லை நிர்ணயம் குறித்த ஒரு மனுவை கொடுக்க விரும்புகிறேன்.


மார்ச் 22, 2025 அன்று, சென்னையில் 'நியாயமான எல்லை நிர்ணயம்' குறித்த கூட்டு நடவடிக்கைக் குழு (JAC) கூட்டம் நடைபெற்றது. இது இந்தியா முழுவதும் உள்ள முதல்வர்கள், துணை முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் சித்தாந்தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியத் தலைவர்களை ஒன்றிணைத்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டமாகும்.


எங்கள் விவாதங்களிலிருந்து எழும் குரல்கள் அரசியல் எல்லைகளைக் கடந்து, நமது பார்லிமென்ட் ஜனநாயகத்தில் நியாயமான பிரதிநிதித்துவத்தை நாடும் பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களின் கவலைகளை உள்ளடக்கியது.


இந்த விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், கூட்டு நடவடிக்கைக் குழுவின் சார்பாக மனுவை முறையாக சமர்ப்பிக்க உங்களை சந்திக்க விரும்புகிறேன். விரைவில் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.


இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறி உள்ளார்.

Advertisement