ரூ.5 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு தலைமறைவான முதியவர் கைது

சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் தாராசந்த், 59, சென்னை மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகார்:

தேனாம்பேட்டையில், எனக்கு சொந்தமாக, 1,262 சதுரடியில் வீட்டுடன் கூடிய நிலம் உள்ளது. அவற்றை சிலர், போலி ஆவணம் தயாரித்து, தன் தாயாரைப்போல ஆள்மாறாட்டம் செய்து, நிலத்தை அபகரித்துள்ளனர்.

மேலும், நில ஆவணங்களை வங்கியில் அடமானம் வைத்து, 3.32 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

மத்திய குற்றப்பிரிவின் நிலமோசடி புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கலைச்செல்வி, 59 என்பவர் ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது. அவரை கடந்த ஆண்டு ஏப்., 26ல், போலீசார் கைது செய்தனர்.

தலைமறைவான முக்கிய குற்றவாளியான, கோடம்பாக்கத்தை சேர்ந்த ஸ்ரீதர், 60, என்பவரை தேடி வந்தனர். அவரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஸ்ரீதர்மீது, ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவில், நில மோசடி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது.

சென்னையில் சொத்து வாங்கும் நபர்கள், சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் மற்றும் வருவாய் துறை அலுவலகங்களில் உள்ள ஆவணங்களுடன் சரிபார்த்து வாங்குமாறு, சென்னை காவல் துறை உஷார்படுத்தியுள்ளது.

***

Advertisement