21 கி.மீ., துாரம் இரண்டு அடுக்குகளாக மதுரவாயல் - துறைமுகம் மேம்பாலச்சாலை * சட்டசபையில் அமைச்சர் வேலு தகவல்
சென்னை, ''மதுரவாயல் - துறைமுகம் இரண்டடுக்கு மேம்பால சாலை பணியை முடிக்க, 2026ம் ஆண்டு வரை அவகாசம் உள்ளது. விரைந்து பணியை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
சென்னையில், மதுரவாயல் - துறைமுகம் மேம்பால சாலை பணி குறித்து, சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை, கொ.ம.தே.க., - ஈஸ்வரன் கொண்டு வந்தார்.
அப்போது நடந்த விவாதம்:
* கொ.ம.தே.க., ஈஸ்வரன்: இந்த ஆட்சியில், 2023ம் ஆண்டு மதுரவாயல் - துறைமுகம் மேம்பால சாலை, இரண்டடுக்கு மேம்பால சாலையாக மாற்றப்படும் என, அறிவிக்கப்பட்டது.
மத்திய அமைச்சராக, 16 ஆண்டுகளுக்கு முன், டி.ஆர்.பாலு இருந்தபோது திட்டமிடப்பட்டு துவங்கிய பணிகள் கிடப்பில் உள்ளன.
ஏற்றுமதி பொருட்களை துறைமுகத்திற்கு தடையின்றி எடுத்துச் செல்ல தேவையான இந்த சாலையை அமைக்கப்படாததால், மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தை, நாடு முழுதும் சந்தித்துள்ளோம்.
இரவில் மட்டும்தான் துறைமுகத்திற்கு, ஏற்றுமதி பொருட்கள் எடுத்துச்செல்ல அனுமதி உள்ளது; பகலில் செல்ல வழியில்லை.
முதல்வராக இருந்த கருணாநிதி வலியுறுத்தலால், டி.ஆர்.பாலு இந்த சாலை திட்டத்தை கொண்டு வந்தார். எனவே, இந்த சாலைக்கு கருணாநிதி பெயரை வைக்க வேண்டும். மதுரவாயல் வரை திட்டமிடப்பட்ட இந்த சாலையை, பூந்தமல்லி வெளிவட்ட சாலை வரை நீட்டிக்க வேண்டும்.
* அமைச்சர் வேலு: கருணாநிதி முதல்வராக இருந்தபோது, பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை அழைத்து வந்து, சாலை பணியை துவக்கினார். இது, 16 ஆண்டு காலம் கிடப்பில் இருந்தது.
முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றபின், டில்லி சென்று பிரதமர், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம், நேரடியாக திட்டத்தை வலியுறுத்தினார். இரண்டு முறை நானும் கடிதம் கொடுத்து வலியுறுத்தினேன்.
அதனால், மீண்டும் சாலை அமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மொத்தம், 21 கி.மீ., இரண்டு அடுக்குகளாக சாலை அமையவுள்ளது.
மேல்பகுதி மேம்பாலம் வழியாக மதுரவாயலில் இருந்து புறப்பட்டு, நேரடியாக துறைமுகம் செல்லலாம். கீழ்பகுதி மேம்பாலத்தில், ஆறு இடங்களில் இறங்கு பாலமும், ஏழு இடங்களில் ஏறும் பாலமும் அமைய உள்ளது.
இப்பணிகளை விரைந்து முடிக்க, மாதம் ஒருமுறை ஆய்வு நடத்தி வருகிறேன். தொடர்புடைய துறை அதிகாரிகள் மட்டுமின்றி, ஒப்பந்த நிறுவனத்தையும் அழைத்து பேசுகிறேன்.
சில இடர்பாடுகள் இருப்பதாக கூறினர். கூவம் ஆற்றில், 15 கி.மீ., பாலம் பயணிப்பதால், நீர்வளத் துறை அனுமதி வேண்டும் என்றனர். நீர்வளத் துறை அமைச்சரிடம் சொல்லி, தடையில்லா சான்று வழங்கி பணிகள் நடக்கின்றன.
கூவம் கரையோர குடியிருப்புகள் இடமாற்றம் செய்யப்பட்டு, மின்சாரம், குடிநீர் சாதனங்கள், போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. ராணுவ இடத்தில் பணி நடக்க உள்ளதால், அவர்களுக்கு மாற்று இடம் தரப்படுகிறது.
மேம்பால சாலை பணியை முடிக்க, 2026ம் ஆண்டு வரை அவகாசம் உள்ளது. விரைந்து பணியை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
***
மேலும்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: கோல்கட்டா அணி 200 ரன்கள் குவிப்பு
-
கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என்று சிலருக்கு நப்பாசை; மார்க்சிஸ்ட் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
25 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்க தீர்ப்பை ஏற்க மாட்டேன்; ஆனால் அதனை செயல்படுத்துவோம்: சொல்கிறார் மம்தா
-
பீஹார், மேற்குவங்கம், தமிழகத்திற்கு அமித் ஷா பயணம்
-
வளர்ச்சியை நம்புகிறோம்: எல்லை விரிவாக்கத்தை அல்ல: பிரதமர் மோடி
-
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கச்சத்தீவு மீட்பு மட்டுமே: முதல்வர் ஸ்டாலின்