ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது

புதுச்சேரி: ஆந்திராவில் இருந்து புதுச்சேரிக்கு 4 கிலோ கஞ்சா கடத்தி வந்த வழக்கில், மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி போதை பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் கடந்த 26ம் தேதி இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
தற்காலிக பஸ் நிலையம் அருகே போலீசாரை கண்ட வாலிபர் ஒருவர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். அவரை விரட்டி பிடித்த போலீசார், நடத்திய சோதனையில், 4 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், புதுச்சேரி, ஜி.என்.பாளையத்தை சேர்ந்த சித்தானந்தம், 20; என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி, புதுச்சேரியில் விற்பனை செய்ய கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, சித்தானந்தத்தை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே, அவர் அளித்த தகவலின் பேரில், விழுப்புரத்தை சேர்ந்த அசாருதீன், 24; என்பவரை உருளையன்பேட்டை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், அசாருதீன் உருளையன்பேட்டை அம்மன் நகரில் உள்ள சரவணன் என்பவரது மாடிவீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் நேற்று இரவு அங்கு சென்றபோது, அசாருதீன் போலீசாரை கண்டவுடன், மாடியில் இருந்து கீழே குதித்ததில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
தொடர்ந்து, அசாருதீனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 250 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். பின், கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட அசாருதீன் மீது ஏற்கனவே, உருளையன்பேட்டை போலீசில் கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.