தொழில் நிறுவன அதிகாரியிடம் ரூ. 5 கோடி மோசடி செய்தவர் கைது

1

புதுச்சேரி: புதுச்சேரியில் தனியார் தொழிற்சாலை நிறுவனர் பெயரில் ரூ. 5 கோடி மோசடி செய்த மேற்கு வங்கத்தை சேர்ந்தவரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் தனியார் தொழிற்சாலை உள்ளது. அங்கு சுவிகியா என்பவர் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவரது செல்போன் எண்ணுக்கு அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி வந்தது. அதில் அவரது உரிமையாளரின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதில், அரசு அதிகாரிகளிடம் ஒரு புதிய திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்திக்கொண்டு இருக்கிறேன். நமது அலுவலக வங்கி கணக்கில் உள்ள தொகையை மற்றொரு வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்குமாறு கூறினார். இதனை உண்மை என்று நம்பிய சுவிகியா ரூ.5 கோடியே 10 லட்சத்தை அந்த வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார் பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் இது தொடர்பாக தனது உரிமையாளரிடம் பேசினார். அப்போது் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி ஆகியோர் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் ரூ.5 கோடியே 10 லட்சம் தொகையில், ரூ. 3 கோடி மேற்கு வங்காளத்தில் உள்ள முர்ஷிதாபாத் கிளையில் உள்ள மொபிகுல் ஆலம் முலா என்பவரது வங்கி கணக்கு மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது.

இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி தலைமையிலான சைபர் க்ரைம் போலீசார் மேற்கு வங்கம் சென்று மொபிகுல் ஆலம் முலாவை கைது செய்தனர்.

பின் அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ. 2.3 கோடி பணத்தை போலீசார் மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில், இந்த மோசடியில் மேலும் 5 பேர் ஈடுப்பட்டது தெரியவந்தது. மொபிகுல் ஆலம் முலாவை புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

Advertisement