சிலம்பம் போட்டியில் மாணவி தொடர் சாதனை

விழுப்புரம்: விழுப்புரத்தை சேர்ந்த தொழிலாளியின் மகள் சிலம்பம் போட்டியில் தொடர் சாதனைகளை படைத்து வருகிறார்.

விழுப்புரம், மகாராஜபுரம் குயவர் தெருவை சேர்ந்தவர் பெருமாள். கூலி தொழிலாளி. இவர் மனைவி சுருதி. இவர்களின் மகள் சாதனா. இவர், அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளியில் 9ம் வகுப்பு பயில்கிறார்.

மாணவி சுருதி, விழுப்புரம் டி.என்.ஆர்.எஸ்., அன்பு சிலம்பம் மற்றும் கராத்தே அறக்கட்டளை பயிற்சியாளர் அன்பரசியிடம், சிலம்பம், குத்துவரிசை, வளரி பயிற்சிகளை கடந்த 4 ஆண்டுகளாக கற்று கொண்டு வருகிறார். இது சம்பந்தமான பல்வேறு மாவட்ட, மாநில போட்டிகளில் வென்று சாதனை படைத்துள்ளார்.

மேலும், இவர், முதல்வர் கோப்பை சிலம்பம் போட்டியில் முதலிடத்தை பிடித்து தேசிய போட்டியில் பங்கேற்கும் தகுதியை பெற்றார்.

மாணவி சுருதி, நோபல் வேர்ல்ட் ரெகார்ட் அமைப்பு மூலம் சிலம்பம் ஒரு மணி நேரம் இடைவிடாமல் சுற்றி சாதனை படைத்துள்ளார்.

தொடர்ந்து, சுருதி திருச்சியில் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் நடத்திய 12 ஆயிரம் பேர் பங்கேற்ற சிலம்பம் உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்று சாதித்துள்ளார். சுருதி சிலம்பத்தில் ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, சுருள்வால், அலங்கார சிலம்பம், வாள்வீச்சு, தீச்சிலம்பம் உள்ளிட்ட அனைத்து பயிற்சி பாடங்களை கற்று பல்வேறு சாதனைகளை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement