திண்டிவனம் மேம்பாலத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

திண்டிவனம்: தினமலர் செய்தி எதிரொலியால், திண்டிவனம் மேம்பாலத்திலிருந்த ஆக்கிமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

திண்டிவனம் மேம்பாலத்தின் மேல்பகுதியில், நான்கு மார்க்கங்களில் இருந்தும் வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்தப்பகுதியில் வாகன போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரம் பழம், பூ உள்ளிட்ட கடைகளை போட்டு வியாபாரம் செய்வது குறித்தும், இதனால் பாலத்தின் மேல்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படும் அபாயம் குறித்து தினமலர் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது.

இது குறித்து திண்டிவனம் சப்கலெக்டரின் கவனத்திற்கு வந்த உடன், திண்டிவனம் உட்கோட்ட போலீசாருக்கு, பாலத்தின் மேல்பகுதியிலுள்ள கடைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சப்கலெக்டர் திவ்யான்சு நிகம் அறிவுறுத்தினார்.

அதையடுத்து, திண்டிவனம் டவுன் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் துணையுடன் நேற்று காலை மேம்பாலத்தின் மேல்பகுியில் இருந்த கடைகள் அகற்றப்பட்டது. வேறு இடத்தில் கடைகளை வைத்துக்கொள்ளுமாறு நடைபாதை வியாபாரிகளிடம் போலீசார் அறிவுறுத்தி அனுப்பினர்.

Advertisement