ஆரோவில் பீச்சில் கழிவறை வசதிகள் இல்லாததால் சுற்றுலாப்பயணிகள் அவதி

கோட்டக்குப்பம்: ஆரோவில் பீச்சில், கழிவறை வசதிகள் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையார்பாளையம் ஊராட்சி, பெரிய முதலியார்சாவடியில் ஆரோவில், பீச் அமைந்துள்ளது.

இங்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும்.

ஆனால் சுற்றுலாப் பயணிகள் அவசர தேவைக்கு என தனியாக இதுவரை ஒரு பொதுக்கழிப்பிட வசதி செய்து தரப்பட வில்லை.

இதனால் சுற்றுலா வரும் பெண்கள், கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அப்படியே அவசரத்திற்கு தனியார் கெஸ்ட் அவுஸ்களில் உள்ள டாய்லெட்க்களை பயன்படுத்தும் நிலை உள்ளது. மக்கள் கூடும் பெரும்பாலான இடங்களில் 'ரெடிமேட் டாய்லெட்' வசதிகள் செய்து தரப்படுகிறது. ஆனால் முக்கிய இடமாக கருத்தப்படும் ஆரோவில் பீச்சில், ரெடிமேட் டாய்லெட் வைக்கவோ, பொதுக்கழிப்பிட வசதி ஏற்படுத்த தரவோ இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது குறித்து சுற்றுலாப்பயணிகள் கூறுகையில், 'புகழ் பெற்ற இடமாக ஆரோவில் பீச் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். ஆனால், அவசரத்திற்கு கழிவறை வசதிகள் இல்லாதது வேதனை அளிக்கிறது. சுற்றுலாப்பயணிகளின் கஷ்டத்தை அறிந்து பொதுக்கழிப்பிட வசதி ஏற்படுத்தி பராமரிக்க வேண்டும்' என்றனர்.

Advertisement