தேசிய அளவில் அடிமுறை போட்டி சூளாங்குறிச்சி மாணவர்கள் வெற்றி

கள்ளக்குறிச்சி: கன்னியாகுமரியில் நடந்த தேசிய அளவிலான அடிமுறை போட்டியில் சூளாங்குறிச்சியை சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
இந்திய வர்ம அடிமுறை சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு அடிமுறை சங்கம் சார்பில், கடந்த மார்ச் 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் 7வது தேசிய அளவிலான அடிமுறை போட்டி நடந்தது. சிரமக்கலை சண்டை, கத்திச்சுவடு, கைச்சண்டை, வால் கேடயம் சுவடு உட்பட பல்வேறு வகையான போட்டிகள், பல பிரிவுகளாக நடத்தப்பட்டன. இதில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, டில்லி, ஹரியானா, ஜம்மு காஷ்மீர், இமாச்சலபிரதேஷ் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட மாநிலங்களை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில், கள்ளக்குறிச்சி மாவட்ட அடிமுறை சங்கம் சார்பில் பங்கேற்ற சூளாங்குறிச்சி இந்திய தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு கலைக்கூடம் வீரர் வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். மொத்தமாக 8 தங்கம், 5 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தேசிய அளவிலான அடிமுறை போட்டி இயக்குநர் சுதாகர் சான்றிதழ், பதக்கங்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் கலைக்கூட பயிற்சியாளர் ஜெயபால் உடனிருந்தார்.