ஜல்ஜீவன் திட்டத்தில் தரமற்ற பணியால் புகார்

மதுரை: மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் வீடுதோறும் குழாய் இணைப்பு வழங்கி குடிநீர் வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.

கிராமங்கள் மட்டுமின்றி, மதுரை போன்ற பெருநகரங்களிலும் வீட்டுக்கு வீடு இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது. தெருக்களில் குழாய் இணைப்பு கொண்டு வரும் ஒப்பந்ததாரர்கள் வீடுகளுக்கு இணைப்பு வழங்கும்போது மீட்டர் பொருத்துகின்றனர். இந்த மீட்டர் ஒரு 'பாக்ஸ்' போன்று உள்ளது. இதனை குழாயில் இணைப்பதற்கு 10 சிறிய 'ஸ்குரூ' ஆணிகள் உள்ளன. அவற்றில் 4 ஆணிகளை மட்டும் பொருத்தி ஏனோ தானோவென்று பணியாற்றுகின்றனர்.

இதனால் மீட்டர் பாக்ஸ் எவ்வளவு காலத்திற்கு அதில் பொருந்தி இருக்கும் என்ற கேள்வி எழுகிறது. மாநகராட்சி வார்டு 17 ல் மகாத்மா காந்திநகர், எல்.ஐ.சி., காலனி, முடக்காத்தான் உட்பட பல பகுதிகளில் இதுபோன்று தரமின்றி பணிசெய்வதாக சிலர் மாநகராட்சிக்கு புகாரும் தெரிவித்துள்ளனர். ஆனால் அதை கண்டு கொள்ளத்தான் யாரும் இல்லை என குடியிருப்புவாசிகள் புலம்புகின்றனர். மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement