வாடகை வீட்டை போகியத்திற்கு விட்டு மோசடி செய்தவர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'

கோவை; வடவள்ளி பகுதியில் வாடகைக்கு எடுத்த வீட்டை, போகியத்திற்கு விட்டு மோசடி செய்தவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

கோவை, கணபதி பகுதியை சேர்ந்தவர் ஜெகநாத்சிங், 45. இவர் வடவள்ளியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடியிருந்து வந்தார். அந்த வீட்டு ஆவணங்களை போலியாக தயார் செய்து போகியத்திற்கு விடுவதாக, விளம்பரம் செய்தார்.

இதைப்பார்த்து, செல்வராஜ், 55 என்பவர் ஜெகநாத்சிங்கை தொடர்பு கொண்டு பேசினார். நேரில் பார்த்த பிறகு செல்வராஜ், ரூ. 12 லட்சம் பணத்தை ஜெகநாத்சிங்கிடம் கொடுத்து ஒப்பந்தம் செய்து கொண்டார். இதன் பின், செல்வராஜ் அந்த வீட்டில் குடியேறினார்.

குடியேறிய சில நாட்களில், கவிதா என்பவர் அங்கு வந்து வீடு தன்னுடையது என கூறினார். செல்வராஜ் வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜெகநாத்சிங்கை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், இதேபோல் பலரிடம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. அவரை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், தொடர்ந்து மோசடிகளில் ஈடுபட்டு வந்த ஜெகநாத்சிங்கை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டார்.

Advertisement