திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய விழா

திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயில் பங்குனி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் - சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழா வருடம்தோறும் பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும், தினசரி அம்மனும் சுவாமியில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். இந்தாண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அம்மனும் சுவாமியும் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரம் அருகே எழுந்தருளினர்.

கொடி மரத்திற்கு பால், பன்னீர், சந்தனம் ஆகியவற்றை கொண்டு அபிஷேகம் நடந்தது. காலை 9:45 மணிக்கு தங்க நிற கொடி மரத்தில் பட்டர்கள் ஏற்றினர். பின் கொடி மரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டது. கொடியேற்ற வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் அம்மனையும் சுவாமியையும் வழிபட்டனர். 9ம் தேதி காலை10:30 மணிக்கு திருக்கல்யாண வைபவமும், 10ம் தேதி வியாழக்கிழமை காலை ஒன்பது மணிக்கு தேரோட்டமும் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் தண்ணாயிரம் மற்றும் பக்தர்கள், கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.

Advertisement