போர் விமான விபத்தில் விமானி உயிரிழப்பு; பயிற்சியின் போது நேர்ந்த துயரம்!

2


ஆமதாபாத்: குஜராத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் விபத்துக்குள்ளானதில் ஒரு விமானி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் ஜாம்நகர் விமானநிலையத்திலிருந்து வான்வழியாக வந்த ஐ.ஏ.எப் ஜாகுவார் போர் விமானம் நேற்றிரவு விபத்துக்குள்ளானது. விமானிகள் தொழில்நுட்பக் கோளாறை எதிர்கொண்டு வெளியேற்ற தொடங்கினர். விபத்தில் சிக்கிய போது விமானத்தில் விமானிகள் இரண்டு பேர் இருந்தனர். ஒருவர் காயத்துடன் தப்பினார். அவர் ஜாம்நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



மற்றொரு விமானி காணாமல் போனார். அவரை விமானப்படை அதிகாரிகள் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் இன்று காணாமல் போன விமானி உயிரிழந்ததாக, விமானப் படை அறிவித்துள்ளது. விமான படையின் மூத்த அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தை இரவே சென்று பார்வையிட்டனர்.



இது குறித்து மீட்பு படை அதிகாரி ஒருவர் கூறியதாவது: விபத்துக்கு முன்பு ஒரு விமானி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில், மற்றொரு விமானியை மீட்க முடியவில்லை. விமானம் தீப்பிடித்தது. இதனால் தீயில் சிக்கி விமானி ஒருவர் உயிரிழந்தார், என்றார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக போர் விமானம் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது.

Advertisement