அமெரிக்க வரி விதிப்புக்கு சீறிய ராகுல்; பா.ஜ., பதிலடி

1

புதுடில்லி : சீன ஆக்கிரமிப்பு, அமெரிக்க வரி விதிப்பு என சுட்டிக்காட்டி வெளியுறவு கொள்கைகளையும், பிரதமர் மோடியையும் மிகக் கடுமையாக விமர்சித்து, லோக்சபாவில் ராகுல் நேற்று பேசினார்.


இதையடுத்து, சீனாவிடம் இருந்து ராஜிவ் அறக்கட்டளைக்கு பணம் பெற்றது ஏன்; கச்சத்தீவை தாரைவார்த்த வலிமையற்ற பிரதமர் யார்?' என, பா.ஜ., கேள்வி எழுப்பியது.

தலை வணங்குகிறோம்



பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தற்போது நடக்கிறது. லோக்சபாவில் நேற்று பூஜ்ய நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசியதாவது:

நம் நிலப்பரப்பில், 4,000 சதுர கி.மீ., பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது. இந்த சமயத்தில் சீன துாதருடன் நம் வெளியுறவு செயலர் கேக் வெட்டியதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.

கடந்த 2020-ல் கல்வான் பள்ளத்தாக்கில், நம் 20 வீரர்கள் உயிர் தியாகம் செய்ததை இப்படி கொண்டாடுகின்றனரா? நாங்கள் சுமுக நிலை திரும்புவதற்கு எதிரானவர்கள் அல்ல; அதற்கு, முன் நம் நிலத்தை சீனாவிடம் இருந்து மீட்க வேண்டும்.

ஒருபுறம் சீனா இப்படி நடந்து கொள்ளும் நிலையில், மறுபுறம் நம் பொருளாதாரத்தை முற்றிலும் சீரழிக்கும் வகையில், பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்கா அமல் படுத்தியுள்ளது.

நம் வெளியுறவு கொள்கையின் நிலை என்ன? பிரதமராக இந்திரா இருந்தபோது, 'நம் வெளியுறவு கொள்கையானது, வலதும் கிடையாது; இடதும் கிடையாது; நேரானது' என்றார்.

ஆனால், பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகள் வித்தியாசமாக இருக்கின்றன. நமக்கு எதிரில் வரும் ஒவ்வொரு வெளிநாட்டவர் முன்பும் தலை வணங்குகிறோம்.

இவ்வாறு ராகுல் பேசினார்.

இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, 'பிரதமர் மோடியும் பா.ஜ., அரசின் வெளியுறவு கொள்கையும், முதுகெலும்பற்ற நிலையில் இருக்கின்றன' என ராகுல் விமர்சித்தார். இதற்கு லோக்சபாவிலேயே, பா.ஜ., பதிலடி கொடுத்தது.

பா.ஜ., - எம்.பி., அனுராக் தாக்குர் பேசியதாவது:

அக்சய் சின் பகுதியை சீனா ஆக்கிரமிப்பு செய்தபோது ஆட்சியில் இருந்தது யார்? டோக்லாம் போர் சூழல் சமயத்தில் சீன அதிகாரிகளுடன் அமர்ந்து, 'சீன சூப்' சாப்பிட்டுக் கொண்டிருந்த காங்., தலைவர் யார்?

சீன அதிகாரிகளிடம் இருந்து ராஜிவ் அறக்கட்டளைக்கு பணம் பெறப்பட்டதா, இல்லையா? எதற்காக அந்த பணம் பெறப்பட்டது என்ற கேள்விக்கு காங்., இன்னும் பதிலளிக்கவே இல்லை.

மோடி ஆட்சியில், ஒரு அங்குலம் நிலம் கூட சீனா வசம் போகவில்லை. பிரதமர் மோடியும், ராணுவ அமைச்சரும் எல்லைக்கே சென்று ராணுவ வீரர்களை சந்தித்து ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்



பா.ஜ., - -எம்.பி., நிஷிகாந்த் துபே பேசுகையில், “காங்., ஆட்சியைப் போன்று பலவீனமான பிரதமர் இப்போது கிடையாது.

சீன கம்யூ., கட்சியுடன் நாங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யவில்லை. பிரதமர் மோடிக்கு உலகமே தலை வணங்குகிறது.

''அமெரிக்க அதிபர், 'நண்பர் மோடி' என்கிறார். ஆஸ்திரேலிய பிரதமர், 'பாஸ்' என்கிறார். பப்புவா நியு கினியா பிரதமர், நம் பிரதமரின் கால்களை தொடுகிறார்.

''இதுதான் இன்றைய நிலைமை. இலங்கைக்கு கச்சத்தீவையும், சீனாவுக்கு திபெத்தையும் வழங்கிய காங்., பிரதமர்களைப் போல பலவீனமானவர் அல்ல, நம் பிரதமர் மோடி,” என்றார்.

Advertisement