வேளாண் கூட்டுறவு சங்கத்தில் மோசடி: செயலாளர் 'சஸ்பெண்ட்'

ராமநாதபுரம்,:ராமநாதபுரம் மாவட்டம் திருவெற்றியூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது. விசாரணை நிலுவையில் உள்ளதால் சங்கச் செயலாளர் செல்வநாதன் 60, ஓய்வுபெற இருந்த நிலையில் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.

இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர்களுக்கு பயிர்க்கடன், பயிர் காப்பீடு தொகை, நகைக் கடன், உரங்கள் வழங்கப்படுகிறது. இதில் 2023-24ல் பயிர்க் கடன் வழங்கியதில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.20 லட்சத்திற்கு மேல் மோசடி நடந்துள்ளது கண்டறியப்பட்டது.

இதில் சங்கச் செயலாளர் செல்வநாதன் மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடக்கிறது. ஒருவருக்கு கடன் ஜாமின் வழங்கியதில் பணம் செலுத்தாமல் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மார்ச் 31ல் ஓய்வுபெற இருந்த நிலையில் செல்வநாதனை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஜினு 'சஸ்பெண்ட்' செய்துள்ளார்.

தொடர்ந்து மோசடி தொடர்பாக கூட்டுறவு துணை பதிவாளர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement