இன்ஸ்பெக்டர் பதவி உயர்வுக்காக 14 ஆண்டுகளாக காத்திருக்கும் எஸ்.ஐ.,க்கள்

சிவகங்கை:தமிழகத்தில் 2011ல் எஸ்.ஐ.,க்களாக தேர்வு செய்யப்பட்டு 14 ஆண்டுகளாக பதவி உயர்வுக்காக 1026 எஸ்.ஐ.,க்கள் காத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

போலீஸ் துறையில் கிரேடு 2 போலீஸ் முதல் டி.ஜி.பி., வரை 1.75 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, 7 ஆண்டிற்கு மேல் தண்டனை பெறும் வழக்குகளில் விசாரணை செய்து, உரிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது இன்ஸ்பெக்டர்களின் முக்கிய பணி ஆகும். மாநில அளவில் 150 இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கூடுதல் பணிச்சுமையால் தற்போது இன்ஸ்பெக்டர்கள் தவித்து வருகின்றனர்.

2011 ம் ஆண்டு எஸ்.ஐ.,க்களாக பணியில் சேர்ந்த 1,026 பேர், 10 ஆண்டுகள் குற்றச்சாட்டின்றி பணிபுரிந்தால் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்க வேண்டும். ஆனால் பணியில் சேர்ந்து 14 ஆண்டுகளான நிலையில் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு கிடைக்காமல் 1,026 பேர் காத்திருக்கின்றனர்.

பதவி உயர்வை எதிர்பார்த்துள்ள எஸ்.ஐ.,க்கள் கூறியதாவது: மற்ற அரசு துறைகளில் பணியில் சேர்ந்தது முதல் 5 முதல் 7 ஆண்டிற்குள் பதவி உயர்வு பெற்று செல்கின்றனர். போலீஸ் துறையில் மட்டும் தான் பதவி உயர்வு எட்டாக்கனியாக உள்ளது. ஏற்கனவே 10 ஆண்டுகள் எஸ்.ஐ.,க்கு பின், 11 வது ஆண்டில் இருந்து இன்ஸ்பெக்டருக்கான சம்பளத்தை பெற்று வருகிறோம். ஆனால் பதவி உயர்வு மட்டும் வழங்கப்படவில்லை. இதனால் அரசுக்கு நிதிச்சுமையும் ஏற்படாது என்றனர்.

Advertisement