'பார்க்கிங்'ல் இயங்கிய அமுதசுரபி ஒயின்ஸ் கோர்ட் உத்தரவால் அதிரடி அகற்றம்

புதுச்சேரி: பார்க்கிங்கில் இயங்கிய அமுதசுரபி அரசு மதுபான கடை ஐகோர்ட் உத்தரவால் அகற்றப்பட்டது.
புதுச்சேரியில் கூட்டுறவு நிறுவனமான அமுதசுரபி சார்பில், 14 மதுபான கடைகள் இயங்கி வருகிறது.
தனியாருக்கு போட்டியாக பிரிமியம் பிராண்ட் மதுபானங்களை விற்பதற்கு புதுச்சேரி சர்தார் பட்டேல் சாலையில் தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி தரை தளத்தில் ஒரு லட்சம் ரூபாய் வாடகையில் 'எலைட் ஒயின் ஷாப்' நடத்தி வந்தது.
கூட்டுறவு மதுபான கடையான இதில், வெளிநாட்டு மதுபானங்கள் சரியான விலையில் விற்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் இங்கு அலை மோதியது.
இந்நிலையில் தங்கும் விடுதி கட்டடத்தில் விதிமீறல்கள் உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த விடுதியின் தரைதளம் வாகனம் நிறுத்தத்திற்கான ( பார்க்கிங்) இடமாக காட்டப்பட்டு கட்டடம் கட்டப்பட்டுள்ளதாகவும், கட்டடத்தில் உள்ள அரசு மதுபானக் கடை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.
அதையடுத்து, கவர்னர் கைலாஷ்நாதன் கலால் துறை செயலர் ஆஷிஸ் மாதவராவ் மோரிடம் உடனடியாக மதுபான கடைக்கு சீல் வைத்து, கடையை அகற்ற உத்தரவிட்டார். அதன்பேரில், கலால் தாசில்தார் ராஜேஷ் கண்ணா நேற்று காலை எலைட் மதுபான கடைக்கு சீல் வைத்தார்.
பின்னர் கடையை காலி செய்து, அதில் இருந்த ஒரு கோடி ரூபாய் மதுபானங்களை அமுதசுரபி ஊழியர்கள் குடோனிற்கு எடுத்து சென்றனர்.
புதுச்சேரியில் உள்ள பல தனியார் தங்கும் விடுதிகளில் வாகன பார்க்கிங்கான இடத்தை கடைகள் மற்றும் ஓட்டல்களுக்கு வாடகை விட்டு லாபம் பார்த்து வருகின்றனர். அமுதசுரபி அதிகாரிகள் கடை நடத்தப்பட்டது பார்க்கிங் இடம் என தெரியாமல் மதுபான கடையை எப்படி திறந்தனர் என்பது ஆச்சர்யமாக உள்ளது. இந்த கடையை காலி செய்வதில் பெரும்பங்கு தனியார் போட்டி மதுபான கடைக்காரர்களின் பங்கு உள்ளது என, அமுதசுரபி ஊழியர்கள் புலம்பி வருகின்றனர்.