அபாண்டமாக குற்றஞ்சாட்டுவதா? அனுராக் மீது கார்கே பாய்ச்சல்

16

புதுடில்லி : “என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை பா.ஜ., - எம்.பி., அனுராக் தாக்குர் நிரூபிக்க வேண்டும். இல்லையேல், பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும்,” என ராஜ்யசபாவில், எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.


லோக்சபாவில் நேற்று முன்தினம் வக்ப் மசோதா நிறைவேற்றம் தொடர்பாக நடந்த விவாதங்களின் போது பேசிய பா.ஜ., - எம்.பி., அனுராக் தாக்குர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபாவின் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குறித்து ஆட்சேபகரமான விதத்தில் பேசினார்.


அந்த பேச்சுகள், சபை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன.

இந்நிலையில், ராஜ்ய சபாவில் நேற்று மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:



நான், 60 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் உள்ளேன். திறந்த புத்தகமாக வாழ்கிறேன். என் மீது இதுவரை யாரும் இதுபோல அவதுாறு கருத்தை கூறியதில்லை. அந்த அளவுக்கு ஒழுக்கமாக உள்ளேன். நானோ, என் வாரிசுகளோ, சட்ட விரோதமாக ஒரு அங்குல நிலத்தையும் அபகரித்ததில்லை.


என் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் பேசிய பா.ஜ., - எம்.பி., அனுராக் தாக்குர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் பேசியதை ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். இல்லையேல், அவர் தன்பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.


சாதாரண தொழிலாளியின் மகனான நான், வட்டார காங்., கமிட்டி தலைவராக இருந்து, கடினமாக உழைத்து, இப்போது காங்கிரஸ் தேசிய தலைவராக ஆகியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement