திருபுவனையில் புதிய மின்மாற்றி எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு

திருபுவனை: திருபுவனையில் மின் பற்றாக்குறையை போக்க ரூ.15.82 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட புதிய மின் மாற்றியை அங்காளன் எம்.எல்.ஏ., மக்கள் இயக்கி வைத்தார்.
திருபுவனை பெருமாள் கோவில் தெரு, பழைய ஹாஸ்பிடல் தெரு, செங்குந்தர் வீதி, வெங்கடா நகர், ராகவேந்திர நகர் ஆகிய பகுதிகளில் குறைந்த மின் அழுத்தம் நிலவி வந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ., அங்காளனிடம், புதிய மின் மாற்றி அமைத்து தரவேண்டி கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து புதிய மின்மாற்றி அமைக்க ரூ. 15.82 லட்சம் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு, அரசு அனுமதி பெறப்பட்டு இதற்கான வேலைகள் கடந்த வாரம் துவங்கி புதிய மின்மாற்றி அமைப்பதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்தது.
இந்த நிலையில் நேற்று அங்காளன் எம்.எல்.ஏ., 200 கிலோ வாட், புதிய மின் மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்காக இயக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் திருபு வனை துணை மின் நிலைய உதவி மின் பொறியாளர் பன்னீர்செல்வம், இளநிலை பொறியாளர் பழனிவேல் மற்றும் மின்துறை ஊழியர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.