25,753 ஆசிரியர்கள் நியமனம் செல்லாது: மேற்கு வங்க அரசுக்கு விழுந்தது இடி

புதுடில்லி; 'மேற்கு வங்க அரசு பள்ளிகளுக்கான, 25,753 ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களின் நியமனம் செல்லாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநில அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கான 24,640 பணியிடங்களை நிரப்ப, 2016ல் மாநில அரசு தேர்வு நடத்தியது. 23 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதினர்; 25,753 பேருக்கு பணி ஆணைகள் அனுப்பப்பட்டன.

இந்த தேர்வு நடைமுறையில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.மாநில கல்வித்துறையின் அப்போதைய அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, திரிணமுல் காங்., - எம்.எல்.ஏ., மாணிக் பட்டாசார்யா, ஜிபன் கிருஷ்ண சாஹா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

வழக்கை விசாரித்த கொல்கட்டா உயர் நீதிமன்றம், 25,753 ஆசிரியர்கள் மற்றும் இதர கல்வி பணியாளர்கள் பணி நியமனத்தை ரத்து செய்தது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆசிரியர் நியமனத்துக்கு இடைக்கால தடைவிதித்து கடந்த ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது. பின், இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வு அளித்த தீர்ப்பு:

ஆசிரியர் பணியிடத்துக்கான ஒட்டுமொத்த தேர்வு நடைமுறையுமே குறை உடையதாகவும், களங்கம் ஏற்படுத்தக் கூடியதாகவும் உள்ளது. மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துஉள்ளன. அதை மூடிமறைக்க செய்யப்பட்ட முயற்சிகள், பணியிட தேர்வு நடைமுறைக்கு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்திவிட்டன.

தேர்வின் நம்பகத்தன்மை மற்றும் நியாயம் நீர்த்துப்போய்விட்டது. எனவே, 25,753 ஆசிரியர் மற்றும் இதர பணியாளர்களின் தேர்வு செல்லாது.

இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்கிறோம். அதேநேரம் சில மாற்றங்களையும் செய்துள்ளோம். அதன்படி, நியமனங்கள் ரத்து செய்யப்பட்ட ஊழியர்கள், இதுவரை பெற்ற சம்பளம் மற்றும் பிற ஊதியங்களைத் திருப்பித் தரத் தேவையில்லை.

சில மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தளர்வு அளித்துள்ளோம். அவர்கள் பணியில் தொடர்வர். இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'பணியிட மாற்றம் செய்திருக்கலாமே?'



இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை, முதல்வர் என்ற முறையில் ஏற்கிறேன். ஆனால், தனிப்பட்ட முறையில் ஏற்க முடியாது. இந்த நாட்டின் குடிமகள் என்ற அடிப்படையில், என் கருத்தை தெரிவிக்க உரிமை உள்ளது.

ஒருசிலர் செய்த தவறுக்காக, இந்த, 25,000 பேரின் நியமனத்தை ரத்து செய்துள்ளதை ஏற்க முடியாது. இது, இந்த, 25,000 பேரின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல, அவர்களை சார்ந்துள்ள குடும்பங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த உத்தரவு குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசிப்பேன்.

சமீபத்தில், ஒரு நீதிபதி வீட்டில் பணக்குவியல் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதற்காக அந்த நீதிபதி டிஸ்மிஸ் செய்யப்படவில்லையே; பணியிட மாற்றம் தானே செய்யப்பட்டார். அதுபோல், இந்த ஆசிரியர்களையும் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டிருக்கலாமே. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement