திட்ட இயக்குநர் எச்சரிக்கையை மீறி என்.ஆர்.எச்.எம்., ஊழியர்கள் போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநில சுகாதார இயக்ககத்தின் திட்ட இயக்குனர் எச்சரிக்கையை மீறி சம வேலைக்கு, சம ஊதியம் வழங்ககோரி என்.ஆர்.எச்.எம். ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார இயக்ககத்தின் கீழ் டாக்டர் முதல் கடை நிலை ஊழியர் வரை 700க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக குறைந்த ஊழியத்தில் பணியாற்றி வரும் அவர்களுக்கு 15 ஆயிரம், 12 ஆயிரம், 10 ஆயிரம் என மூன்று நிலைகளாக ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

ஆனால், அதனை ஏற்க மறுத்து, என்.ஆர்.எச்.எம்., ஊழியர்கள் கடந்த 24ம் தேதி முதல் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலக பணியை புறக்கணித்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால், மருத்துவமனைகளில் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் நேற்று (3ம் தேதி)க்குள் பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையென்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில சுகாதார இயக்ககத்தின் திட்ட இயக்குநர் கோவிந்தராஜன் எச்சரித்தார்.

இந்த எச்சரிக்கையையும் மீறி என்ஆர்.எச்.எம் ஊழியர்கள் நேற்றும் பணிகளை புறக்கணித்து, இயக்குனர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை முன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் காங்., நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இதுகுறித்து, ஊழியர்கள் கூறுகையில்,கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த இதுவரையில் அழைப்பு விடுக்கப்படவில்லை. மாறாக போராட்டத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.

Advertisement