விவசாயிகளுக்கான அடையாள எண் பெற ஏப்ரல் 8ம் தேதி கடைசி நாள் வேளாண் உதவி இயக்குனர் தகவல்
விக்கிரவாண்டி: பிரதான் மந்திரி கிசான் நிதி உதவிக்கு விவசாயிகளுக்கு அடையாள எண் பெற வரும் 8ம் தேதி கடைசி நாள் என, விக்கிரவாண்டி வட்டார வேளாண் உதவி இயக்குனர் கங்கா கவுரி தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
விக்கிரவாண்டி, தாலுகாவில் பி.எம்., கிசான் நிதி உதவி பெறும் விவசாயிகள் வரும் காலங்களில் நிதி உதவி பெற அடையாள அட்டை அவசியமாகிறது. அதற்கான இறுதி நாள் வரும் 8ம் தேதி என, அரசு அறிவித்துள்ளது.
இப்பதிவிற்கு விக்கிரவாண்டி தாலுகாவில் உள்ள வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வணிக வேளாண்மை துறை சார்ந்த கள அலுவலர்கள், மகளிர் திட்ட சமுதாய பயிற்றுநர்கள், இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்கள் மூலம் அனைத்து கிராமங்களிலும் விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை எண் வழங்க ஏதுவாக பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது.
அனைத்து பொது இ சேவை மையங்களிலும் இப்பணி இலவசமாக நடைபெற்று வருகிறது. எனவே விவசாயிகள் வரும் 8ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட துறை அலுவலரை அணுகி, இ சேவை மையங்களில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விபரங்களுக்கு வேளாண் உதவி இயக்குனர் 9718376795, வேளாண் அலுவலர் 9786394838, துணை வேளாண் அலுவலர் 9698832733 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.