தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வி பாடப்புத்தகங்கள் தயாரிக்க அழைப்பு

தாய்மொழியில் சிந்தித்தால் தான் கண்டுபிடிப்புகள் அதிகரிக்கும் என்பது நிபுணர்களின் கருத்து. ஆனால், நம் நாட்டில் உயர் கல்வியில் ஆங்கில வழி கல்வியே ஆதிக்கம் செலுத்துகிறது. இதற்கு, தொழில்நுட்ப பாடங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருப்பதே காரணம். தாய்மொழியில் உயர் கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள் ஏமாற்றத்துக்கு ஆளாகின்றனர்.


இவற்றை கருத்தில் கொண்டு, ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் தொழில்நுட்ப கல்வி புத்தகங்களை தயாரித்து வழங்கும் நடவடிக்கையை, சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.



இதுவரை தமிழ் உட்பட, 12 மொழிகளில், 700 பாடப் புத்தகங்கள் வரை தயாரிக்கப்பட்டுள்ளன. இன்ஜினியரிங், டிப்ளமா வகுப்புகளுக்கு, முதல், இரண்டாம் ஆண்டுக்குரிய புத்தகங்கள் ஆன்லைனில் இலவசமாக கிடைக்கின்றன. தற்போது நாட்டில் உள்ள 22 மொழிகளுக்கும், அனைத்து தொழில்நுட்ப பாடங்களையும் தயாரிக்கும் பணியில் ஏ.ஐ.சி.டி.இ., இறங்கியுள்ளது.


இதில் பங்கேற்க, பல்கலை, கல்வி நிறுவனங்கள், பேராசிரியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்திய மொழிகளில் பாடப்புத்தகம் தயாரிக்க விரும்பும் ஆசிரியர்கள், ஏ.ஐ.சி.டி.இ.,யின் https://www.aicte-india.org தளத்தில் விண்ணப்பிக்கலாம்.



- நமது நிருபர் -

Advertisement