எஸ்.சி., - எஸ்.டி.,யினர் தொழில் தொடங்க மானியம் ரூ.2.65 கோடி:மாவட்டத்தில் ஓராண்டில் 138 பேருக்கு கடனுதவி

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக, சுயதொழில் தொடங்க 138 பேருக்கு மானியமாக 2.65 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் வளர்ச்சி காண்பதற்கு, ஏற்றத்தாழ்வின்றி அனைவரும் முன்னேற்றம் காண வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில், ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், பல்வேறு சிறப்பு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

அந்த வகையில், ஏழ்மை நிலையில் உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர்கள், சுயமாக தொழில் துவங்கி, வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் காண வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில், தாட்கோ மூலம் பல்வேறு திட்டங்கள் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு, மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் சுயதொழில் மேற்கொள்வதற்கான வாய்ப்பினை அரசு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவு திட்டத்தின் கீழ் மானிய கடனுதவி வழங்கி, தொழில் தொடங்கவும் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

இது குறித்து, மாவட்ட தாட்கோ மேலாளர் ரமேஷ்குமார் கூறியதாவது:

தாட்கோ மூலம், இச்சிறப்பு திட்டத்தில், கார், ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்கள் வாங்கி இயக்குதல், மளிகை கடை, பேன்சி ஸ்டோர், ஸ்டூடியோ, வெல்டிங் ஒர்க்ஷாப் உள்ளிட்ட தொழில்களுக்கு மானிய கடனுதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் கடந்தாண்டில் (2023-24) மட்டும் 94 ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு மானியமாக 1.70 கோடி ரூபாயும், இந்தாண்டு (2024-2025) 44 ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு மானியமாக 95.73 லட்சம் ரூபாய் என மொத்தம் 138 ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு, சுய தொழில்கள் தொடங்க கடனுதவியும், ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் மானியமாக 2.65 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 2 மாதங்களுக்கு முன் விழுப்புரம் மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வந்தபோது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவு திட்டத்தின் கீழ் 35 சதவீதம் மானியத்தில் 3.70 லட்சம் ரூபாய் வங்கிக் கடனில், வி.சாத்தனுாரைச் சேர்ந்த தொழிலாளி ரவி என்பவருக்கு ஆட்டோ வழங்கப்பட்டது.

இதே போல், கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் வழிகாட்டுதலோடு, தொடர்ந்து, இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் தொழிற் கடனுதவியும், மானியமும் வழங்கப்படுகிறது.

இவ்வாறு ரமேஷ்குமார் தெரிவித்தார்.

Advertisement