சென்னையில் விதிகளை மீறி 10 மாடிகள் கட்டடம்; இடிக்கும் பணிகளில் இறங்கிய சி.எம்.டி.ஏ.

3

சென்னை: சென்னையில் பாண்டிபஜாரில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள 10 மாடிகள் கொண்ட கட்டடத்தை அதிகாரிகள் இடித்து வருகின்றனர்.



சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி, அங்கீகாரம் இல்லாத கட்டடங்கள் ஏராளம் உள்ளன. அவற்றை உரிய ஆய்வுக்கு பின்னர் அதிகாரிகள் சட்டப்படி இடித்து அகற்றி வருகின்றனர்.


அதன் அடிப்படையில் சென்னையின் பரபரப்பான பகுதியான தியாகராய நகர் பாண்டிபஜாரில் உள்ள 10 மாடிகள் கொண்ட கட்டடத்தை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் அகற்றும் நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். இந்த கட்டடம், தரை தளம் மற்றும் 3 தளங்களுடன் கட்ட அனுமதி பெற்றுவிட்டு 10 தளங்கள் வரை கட்டப்பட்டதாக புகார் எழுந்தது.


இதையடுத்து, விதிகளை மீறி கட்டப்பட்ட தளங்களை வரன்முறை செய்யக் கோரி அந்த தனியார் கட்டுமான நிறுவனம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் அனுமதி கோரியது. ஆனால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு மேல் முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது.


இதை தொடர்ந்து, விதிகளை மீறி கட்டப்பட்ட தளங்களை சீல் வைக்கவும், இடிக்கவும் சென்னை மாநகராட்சியிடம் பெருநகர வளர்ச்சிக்குழுமத்தினர் அனுமதி கேட்டிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை ஐகோர்ட்டில் தனியார் கட்டுமான நிறுவனத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.


வழக்கை விசாரித்த ஐகோர்ட், அனுமதியின்றி கட்டப்பட்ட தளங்களை 8 வாரங்களில் அகற்ற கோரி உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் தளங்களை இடிக்கும் நடவடிக்கைகளில் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.


முழுமையான ஆய்வுப் பணிக்கு பின்னர், கட்டடம் முழுமையாக இடிக்கும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. பாதுகாப்பு காரணத்தை முன் வைத்து அந்த பக்கம் செல்லும் பொதுமக்கள் கவனமாக செல்ல வேண்டும் என்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

Advertisement