சென்னைக்கு ஹாட்ரிக் தோல்வி; பவர் பிளே ரன் குவிப்பில் கடைசி இடம்

4

சென்னை: டில்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன்மூலம், சென்னை அணி ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளது.

சேப்பாக்கத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டில்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. டில்லி அணி ரன் எதுவுமின்றி எடுக்காமல் இருக்கும் போது, முதல் ஓவரின் 5வது பந்தில் ஜேக் பிரேசரின் (0) விக்கெட்டை சாய்த்தார் கலில் அகமது.

தொடர்ந்து, கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்த இளம் வீரர் அபிஷேக் போரல் அதிரடியாக ஆடினார். 20 பந்துகளில் 33 ரன்கள் குவித்திருந்த போது ஜடேஜா பந்தில் அவுட்டானார். முதலில் நிதானமாக ஆடிய ராகுல் மெதுவாக அதிரடியை வெளிப்படுத்தினார். இதனால், அவர் அரைசதம் அடித்து 77 ரன்களில் அவுட்டானார்.

இறுதியில் ஸ்டப்ஸ் (24 நாட் அவுட்) அதிரடியை காட்டினார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. சென்னை அணி சார்பில் கலீல் அகமது 2 விக்கெட்டுக்களும், ஜடேஜா, நூர் அகமது, பதிரானா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

184 ரன்கள் இலக்குடன் விளையாடிய சென்னை அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. ரவீந்திரா (3), கெயிக்வாட் (5), கான்வே (13) ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனால், பவர் பிளே முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

தொடர்ந்து, துபே (18), ஜடேஜா (2) என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால், 74 ரன்களுக்கே 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறி வருகிறது. தோனி 11வது ஓவரிலேயே களமிறங்கினார். விஜய் ஷங்கரும், தோனியும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடினர். இருப்பினும் சென்னை அணியால் வெற்றியை நெருங்க முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்து, 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம், சென்னை அணி ஹாட்ரிக் தோல்வியை பதிவு செய்துள்ளது.

விஜய் ஷங்கர் 54 பந்துகளில் 69 ரன்களும், தோனி 26 பந்துகளில் 30 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்தப் போட்டியின் பவர் பிளே முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. மும்பை (62/1), பெங்களூரு (30/3), ராஜஸ்தான் (42/1) ஆகிய அணிகளுக்கு எதிரான பவர் பிளேக்களிலும் பெரிதாக ரன்களை குவிக்கவில்லை.

இதன்மூலம், நடப்பு பிரீமியர் லீக் தொடரில் பவர் பிளேவில் குறைந்த பட்ச ரன்களை அடித்த அணியாக சென்னை மாறியுள்ளது. 7.4 ரன் ரேட் மட்டுமே வைத்துள்ளது. அதிகபட்சமாக ராஜஸ்தான் அணி 11.7 ரன்ரேட்டுடன் முதல் இடத்தில் உள்ளது.

4 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.

Advertisement