போலீசிடம் தப்ப முயன்ற ரவுடிக்கு மாவு கட்டு

நெல்லிக்குப்பம் : போலீசார் பிடிக்க முயன்றபோது, தப்பியோடிய ரவுடி கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தை சேர்ந்தவர் விஜய்செல்வம்,45; இவர் மீது நெல்லிக்குப்பம், கடலுார், சென்னை உட்பட பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் 25க்கும் மேற்பட்ட திருட்டு, அடிதடி வழக்குகள் உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு நெல்லிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்த வழக்கு கோர்ட்டில் விசாரனைக்கு வந்தது. அப்போது காராமணிக்குப்பம் சுகுமார், விஜய் செல்வத்துக்கு எதிராக சாட்சி கூறினார்.

ஆத்திரமடைந்த விஜய் செல்வம், சுகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்து, உறவினர் வீட்டை உடைத்து சேதபடுத்தினார். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விஜய்செல்வத்தை தேடி வந்தனர். இந்நிலையில், நத்தப்பட்டு மேம்பாலம் அருகே அவர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

போலீசார் வருவதை அறிந்த விஜய்செல்வம் தப்பியோட முயன்றபோது, தவறி விழுந்ததில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Advertisement