பு துச் சேரி ஆற்றில் படகு கவிழ்ந்தது சுற்றுலா பயணிகள் 10 பேர் உயிர் தப்பினர்; புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரி : புதுச்சேரி துறைமுகம் அருகே ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சுற்றுலா பயணிகள் 10 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பெங்களூருவை சேர்ந்தவர் ஸ்ரீராம்,31; இவர் தனது மனைவி, இரு குழந்தைகளுடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார். நேற்று மாலை மெரினா பீச்சிற்கு சென்றவர், அங்குள்ள லியோ என்ற தனியார் படகில் குடும்பத்துடன் பயணம் மேற்கொண்டார். அதே படகில், ைஹதராபாத் மற்றும் பெங்களூருவை சேர்ந்த 6 பேர் பயணம் செய்தனர்.

மெரினா பீச்சில் இருந்து புறப்பட்ட படகு, அரியாங்குப்பம் ஆறு, அரிக்கன்மேடு வரை சென்றுவிட்டு மாலை 5:30 மணிக்கு, திரும்பியது. துறைமுகம் அருகே வந்தபோது திடீரென கவிழந்தது. படகில் இருந்த 10 பேரும் இடுப்பளவு தண்ணீரில் தத்தளித்தனர்.

அவர்கள் சத்தம் கேட்டு, சக படகு ஊழியர்கள் 10க்கும் மேற்பட்ட படகுகளில் விரைந்து சென்று, ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த 10 பேரையம் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தேங்காய்திட்டு துறைமுகத்திற்கு சென்றனர். ஆனால், அங்கு அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை எனக் கூறியதை தொடர்ந்து, மெரினா பீச்சிற்கு சென்றனர். அங்கும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகும் எங்கு படகு கவிழ்ந்தது என புரியாமல், தீயணைப்பு வீரர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் திரும்பி சென்றனர்.

இந்நிலையில், உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள் முதலியார்பேட்டை போலீசில் ஸ்டேஷனை தேடி சென்று, படகை அதிவேகமாகவும், கவன குறைவாகவும், திருப்பிய படகு ஒட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார், விபத்திற்குள்ளான படகின் உரிமையாளர் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும், விபத்தில் சிக்கிய படகை பறிமுதல் செய்து, கடலோர காவல்படை துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

கவனம் செலுத்துமா? சுற்றுலாத் துறை



மெரினா கடற்கரையில், எவ்வித உரிமம் இல்லாமல், உரிய ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்களை கொண்டு சுற்றுலாப் பயணிகளை படகு சவாரிக்கு அழைத்து செல்வதும், அவ்வப்போது, படகுகள் கவிழ்ந்து விபத்திற்குள்ளாவதும், அதனை மூடி மறைப்பதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. சுற்றுலாப் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க சுற்றுலா துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement